அதிக மகசூல் பெற நெற்பயிருக்கு உரமிடுவது எப்படி?


அதிக மகசூல் பெற நெற்பயிருக்கு உரமிடுவது எப்படி?
x

திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் வட்டார விவசாயில் அதிக மகசூல் பெற நெற்பயிருக்கு உரமிடுவது எப்படி? என வேளாண் இணை இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்

தூத்துக்குடி

தூத்துக்குடி:

திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் வட்டாரங்களில் விவசாயிகள் நெல்லில் அதிக மகசூல் பெற எப்படி உரமிட வேண்டும்? என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது-

நெல் சாகுபடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில் 1,170 எக்டர் பரப்பளவில் ஆழ்வார்திருநகரி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் வட்டாரங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டு தூர் கட்டும் பருவத்தில் உள்ளது. நெற்பயிரில் அதிக மகசூல் பெற்றிட மேலுரமிடுதல் மேலாண்மை பற்றி அறிந்து, விவசாயிகள் தக்க நேரத்தில் உரிய அளவு உரமிட்டு மகசூல் அதிகமாக பெற்று இலாபம் ஈட்டலாம். பொதுவாக நெல் பயிரில் தூர் கட்டும்பருவம், பூங்குருத்து பருவம் மற்றும் பொதி பருவம் ஆகிய முக்கியமான பருவங்களில் தேவைக்கேற்ப தக்க சமயத்தில் உரமிடுதல் அதிக மகசூல் பெற்றிட வழிவகுக்கும்.

உரம்

குறுகிய கால நெற் பயிரில் 15 முதல் 20 நாட்களிலும் மத்திய கால நெற்பயிரில் 20 முதல் 25 நாட்களிலும் தூர் கட்டும் பருவம் ஆகும். இந்த பருவத்தில் தூர்கள் நன்கு விரைந்து வளர குறுகிய கால நெற்பயிருக்கு ஏக்கருக்கு யூரியா 26 கிலோ மற்றும் பொட்டாஷ் 25 கிலோவும், மத்திய கால நெற்பயிருக்கு ஏக்கருக்கு யூரியா 32 கிலோவும், பொட்டாஷ் 31 கிலோவும் மேலுரமாக இடுதல் வேண்டும். குறுகிய கால நெற்பயிரில் 30 முதல் 35 நாட்களிலும், மத்திய கால நெற்பயிரில் 40 முதல் 45 நாட்களிலும் பூங்குருத்து உருவாகும். இப்பருவத்தில் அதிக அளவில் பூங்குருத்து உருவாகிட குறுகிய கால நெற்பயிருக்கு ஏக்கருக்கு 26 கிலோ யூரியாவும், 25 கிலோ பொட்டாசும் மத்திய கால நெற்பயிருக்கு ஏக்கருக்கு 32 கிலோ யூரியாவும், பொட்டாஷ் 31 கிலோவும் மேலுரமாக இடுதல் வேண்டும்.

பொதி பருவம்

குறுகிய கால நெற்பயிரில் 45 முதல் 50 நாள் வரையிலும் மத்திய கால நெற்பயிரில் 60 முதல் 65 நாள் வரையிலான காலம் பொதி பருவம் எனப்படும். இப்பருவத்தில் குறுகிய கால நெற்பயிருக்கு ஏக்கருக்கு 26 கிலோ யூரியாவும், 25 கிலோ பொட்டாசும் மத்திய கால நெற்பயிருக்கு ஏக்கருக்கு 32 கிலோ யூரியாவும், பொட்டாஷ் 31 கிலோவும் மேலுரமாக இடுதல் வேண்டும். சமீப காலமாக பொட்டாஷ் உரத்தின் விலை அதிகமான காரணத்தினால் விவசாயிகள் பொட்டாஷ் உரத்தை பயன்படுத்துவதை தவிர்த்து அதிக அளவில் யூரியா உரத்தை பயன்படுத்துகின்றனர். அதனால் நெற்பயிரில் சாம்பல் சத்து பற்றாக்குறை ஏற்பட்டு மகசூல் இழப்பு ஏற்படுகிறது. ஆகவே விவசாயிகள் கண்டிப்பாக மேலுரத்தில் யூரியாவுடன் சேர்த்து பொட்டாஷ் உரத்தையும் இடவேண்டும்.

மேலுரம் இடும்பொழுது ஒரு பங்கு யூரியாவுடன் ஜிப்சத்தை 3 பங்கு கலந்து இட வேண்டும். அப்பொழுது தான் யூரியாவில் உள்ள தழை சத்து உடனடியாக உபயோகப்படுத்தப்பட்டு பூக்கள் மலர்ந்து, நெல் மணியாக மாறி எடை அதிகரித்து விளைச்சல் அதிகமாவதற்கு வழி வகுக்கும். எனவே மேற்கண்ட தொழில் நுட்பங்களை விவசாயிகள் கடைபிடித்து அதிக மகசூல் பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story