சேலம் 2 அடுக்கு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்களை இயக்குவது எப்படி?
திறப்பு விழாவுக்கு பிறகு சேலம் 2 அடுக்கு பஸ் நிலையத்தில் இருந்து புறநகர்களுக்கு பஸ்களை எப்படி இயக்குவது என்பது குறித்து அதிகாரிகளுடன், மேயர் ராமச்சந்திரன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை கூட்டம்
சேலம் பழைய பஸ் நிலையம், 2 அடுக்கு பஸ் நிலையமாக புதுப்பிக்கப்பட்டு வருகிற 11-ந் தேதி திறக்கப்படுகிறது. அதன்பிறகு 2 அடுக்கு பஸ் நிலையத்தில் இருந்து டவுன் பஸ்கள், தனியார் பஸ்களை எப்படி இயக்குவது என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
மேயர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். தொடர்ந்து 2 அடுக்கு பஸ் நிலையத்தில் கீழ்தளம், மேல் தளம் ஆகியவற்றில் இருந்து எந்தெந்த வழித்தடத்தில் எந்தெந்த பஸ்கள் இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதேபோன்று சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, ரெயில் நிலையம், அடிவாரம், கன்னங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் மற்றும் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பஸ்களை எந்த பகுதியில் இருந்து இயக்குவது குறித்த விவரம் கேட்டு அறிந்தார்.
அதிகாரிகள்
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) அசோக்குமார், கண்காணிப்பு பொறியாளர் ரவி, போக்குவரத்து துறை துணை ஆணையாளர் பிரபாகரன், தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக்கழக துணை மேலாளர் மோகன் குமார், மாநகர நல அலுவலர் யோகானந்த், வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜராஜன், பஸ் உரிமையாளர் சங்க செயலாளர் ரவீந்திரன், தாலுகா பஸ் உரிமையாளர் சங்க செயலாளர் மணி, தலைவர்.நடராஜன், இணைச்செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.