மாடுகளை தாக்கும் பெரியம்மை நோயை தடுப்பது எப்படி?


மாடுகளை தாக்கும் பெரியம்மை நோயை தடுப்பது எப்படி?
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாடுகளை தாக்கும் பெரியம்மை நோயை தடுப்பது எப்படி? என்பது குறித்து கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.

திருவண்ணாமலை


மாடுகளை தாக்கும் பெரியம்மை நோயை தடுப்பது எப்படி? என்பது குறித்து கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் சோமசுந்தரம் இது தொடர்பாக கூறியுள்ளதாவது:-

மாடுகளில் பெரியம்மை என்பது ஈ, கொசு போன்ற கடிக்கும் ரத்தம் உறிஞ்சும் பூச்சிகள் மூலம் பரவக்கூடிய வைரஸ் நோயாகும். இதனால் பாதிக்கப்பட்ட மாடுகளில் காய்ச்சல், உடல் முழுவதும் சிறிய கட்டிகள், கால்களில் வீக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படும். இந்த நோய் பாதிக்கப்பட்ட மாடுகளிலிருந்து நல்ல ஆரோக்கியமான மாடுகளுக்குப் பரவுகிறது. நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து புதியதாக மாடுகளை வாங்கி வருவதன் மூலமாகவும் பரவுகிறது.

அறிகுறிகள்

நோயுற்ற மாடுகளுக்கு கடுமையான காய்ச்சல், உடல் சோர்வு, தீவனம் உண்ணாமை, கண்ணில் நீர் வடிதல், தாடை வீக்கம், வயிற்றின் அடிப்பகுதியில் வீக்கம், இரு முன்னங்கால்களுக்கு இடையில் உள்ள நெஞ்சுப் பகுதியில் வீக்கம், மூக்கில் சளி ஒழுகுதல், பின்னங்கால் மற்றும் தொடைப் பகுதியில் வீக்கம், நிணநீர் சுரப்பிகள் பெரிதாக வீக்கத்துடன் காணப்படுதல், பிறப்புறுப்புகளில் வீக்கம், முகம், கால், உடம்பு என உடலின் எல்லாப் பகுதிகளின் தோல்களிலும் கொப்புளங்கள் மற்றும் கட்டிகள் முடிச்சுகள் போன்று தோன்றுதல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

சில சமயங்களில் கொப்புளங்கள், கட்டிகள் பெரிதாகி உடைந்து புண்களாக மாறி, அவற்றிலிருந்து ரத்தம் மற்றும் சீழ் வடியும். இப்புண்களில் புழுக்கள் உண்டாகி பெரும் உபாதையை ஏற்படுத்தும். நோய் பாதிப்புகள் மடி மற்றும் காம்புகளில் வீக்கம் ஏற்பட்டு, சில சமயம் மடி நோயாக மாறும் இயல்புடையது.

கறவை மாடுகளில் பால் உற்பத்தி வெகுவாகக் குறையும். நோய் பாதிக்கப்பட்ட மாடுகளிலிருந்து பிற மாடுகளுக்கு வேகமாகத் தொற்று பாதிப்பினை ஏற்படுத்தும். காயங்கள் மற்றும் கரணைகள் ஏற்பட்டு தோலின் தரம் பாதிக்கப்படுவதால், தோல் ஏற்றுமதி அதிகமாக பாதிப்பு அடைகிறது. தோல் புண்களில் ஈக்களின் மூலமாக புழுக்கள் ஏற்படுவதால் நோய் வீரியம் அதிகரிக்கும். கன்றுகளில் நோயின் வீரியம் அதிகமாகக் காணப்படும், குறிப்பாக நலிந்த மற்றும் குடற்புழுவினால் பாதிக்கப்பட்ட கன்றுக் குட்டிகளில் இந்த பெரியம்மை நோய் பாதிக்கும் போது இறப்பு கூட ஏற்படலாம்.

மருந்துமுறை

நோய் சிகிச்சை முறைகள் வாய்வழி மூலிகை மருந்து ஒருமுறை கொடுக்கத் தேவைப்படும் அளவு வருமாறு:-

10 வெற்றிலை, 10 கிராம் மிளகு, 10 கிராம் உப்பு, தேவையான அளவு வெல்லம் ஆகிய இவற்றை ஒவ்வொரு முறையும் புதியதாக அரைத்து, சிறிது சிறிதாக நாக்கில் தடவிக் கொடுக்க வேண்டும். முதல்நாள் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறையும், இரண்டாம் நாளிலிருந்து தினமும் மூன்று முறை வீதமும் தொடர்ந்து 2 வாரங்கள் கொடுக்க வேண்டும்.

வெளிப்பூச்சு மூலிகை மருந்து

தோல் காயத்திற்கான வெளிப்பூச்சு மூலிகை மருந்து:-

குப்பைமேனி இலை, அம்மான் பச்சரிசி இலை, வேப்பிலை, துளசி இலை, மருதாணி இலை ஆகியவை தலா 1 கைப்பிடி அளவு, 20 கிராம் மஞ்சள் தூள், பூண்டு (10 பல்).

மேற்கண்ட மருந்தை அரைத்து அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் அல்லது அரை லிட்டர் நல்லெண்ணெயில் கலந்து கொதிக்க வைத்து ஆற வைக்க வேண்டும். அந்த எண்ணெயை பருத்தித் துணியில் தொட்டு, காயங்கள் மீது அடிக்கடி ஒத்தடம் தர வேண்டும். கண்டிப்பாக தேய்க்கக் கூடாது.

தடுப்பு முறைகள் கொசுக்கள் மற்றும் ஈக்களை கட்டுப்படுத்துதல், கொட்டகை மற்றும் சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருத்தல் நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளை மற்ற மாடுகளிடமிருந்து தனிமைப்படுத்துதல் போன்றவற்றின் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story