கறவை பசுக்களுக்கு மடி நோய் ஏற்படாமல் தடுக்கும் முறைகள்


கறவை பசுக்களுக்கு மடி நோய் ஏற்படாமல் தடுக்கும் முறைகள்
x
தினத்தந்தி 23 Jun 2023 12:45 AM IST (Updated: 23 Jun 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

மழைக்காலத்தில் கறவை பசுக்களுக்கு மடி நோய் ஏற்படாமல் தடுக்கும் முறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், கால்நடை உதவி பேராசிரியருமான சபாபதி விளக்கம் அளித்துள்ளார்.

திருவாரூர்

மழைக்காலத்தில் கறவை பசுக்களுக்கு மடி நோய் ஏற்படாமல் தடுக்கும் முறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், கால்நடை உதவி பேராசிரியருமான சபாபதி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மடிநோய்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கடலோர மாவட்டங்களில் கறவை பசுக்கள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றன. குறிப்பாக மிகுந்த பொருளாதார சேதத்தை ஏற்படுத்தும் மடி நோயினை மழைக்காலத்தில் எவ்வாறு தவிர்ப்பது அல்லது சிகிச்சை அளிப்பது என்பது பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும்.

பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நல்ல கறவை மாடுகள் சேறும், ஈரப்பதமும் நிறைந்த மழைக்காலங்களில் அடிக்கடி மடி நோய் தாக்குதலுக்கு உட்படுகின்றன. இதனால் மிகுதியான மருத்துவ செலவு ஏற்படுவதோடு நிரந்தரமாக பால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு விவசாயிகளின் பொருளாதாரத்தை பாதிக்கிறது.

சுகாதாரமில்லாத கொட்டகை

பெரும்பாலும் மடிநோயானது கொட்டகை சுத்தம் மற்றும் சுகாதாரமின்மையால் கிருமிகள் பெருகி காம்பு வழியாக மடியில் நுழைந்து பாதிப்பதால் வருகிறது. எனவே மாடு, கொட்டகை, மடி மற்றும் சுற்றுப்புறத்தை சுகாதாரமாகவும் தூய்மையாகவும் வைத்திருப்பது அவசியம்.

மடிநோய் கண்ட மாடுகள் மடியில் வீக்கம் ஏற்பட்டு சிவந்து மிகுந்த வலியுடன் அவதிப்படும். மாடுகள் பால் கரப்பதையோ அல்லது கன்றுகள் பால் குடிப்பதையோ அனுமதிப்பதில்லை. மேலும் பால் கறந்து பார்த்தால், பாலின் இயற்கை தன்மை மாறுபட்டு தண்ணீராகவோ, உறைந்து தயிர் போன்றோ, பசை போன்றோ அல்லது காப்பி கலரிலோ இருக்கலாம்.

மடிநோய் தடுப்பு முறைகள்

மடிநோயை தடுக்க மழைக்காலங்களில் கொட்டகையை ஈரப்பதம் மிகாமல் வைத்திருப்பது மிகவும் அவசியம். மழைக்காலத்தில் மாட்டு கொட்டகைகளின் கூரைகள் ஒழுகா வண்ணம் ஓட்டை ஒடிசல் அற்று, உள்ளதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் தரைகள் வழுவழுப்பாக இல்லாத வண்ணம் நன்கு சுரண்டி தேய்த்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தரை ஈரப்பதமாகவும் அதிக சாணத்துடன் கிடப்பதால் கறவை பசுக்கள் படுத்திருக்கும் பொழுது மடி முழுவதும் சாணி மற்றும் குப்பைகளால் அழுக்காவதால் மடி நோய் தொற்று வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

மஞ்சள் கலந்த நீர்

பால் கறப்பதற்கு முன்னும் பின்னும் மடியை நன்கு கழுவி உலர்ந்த சுத்தமான துணியால் துடைத்து விட வேண்டும். கறவைக்கு பின்னர் மடியின் மீது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட மாஸ்டி கார்டு அல்லது ட்ரீட் ப்ரோடக்ட் போன்ற தெளிப்பான் மருந்தை தெளித்து வந்தால் காம்பின் ஓட்டைகள் தற்காலிகமாக அடைக்கப்பட்டு நோய்க்கிருமிகள் நுழைவதை தடுப்பதால் மடிநோய் தவிர்க்கப்படுகிறது.

இந்த மருந்து கிடைக்கப்பெறாதவர்கள் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலை மடிமீது தெளித்து விடலாம். அல்லது சிறிது மஞ்சள் கலந்த தண்ணீரையும் தெளிக்கலாம்.

வருமுன் காக்கும் முறைகள்

எப்படிப்பட்ட மடிநோயினையும் வருமுன்னே கண்டுபிடிக்க தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட தனு செக் கலர் அட்டை பயன்படுகிறது. இதை பயன்படுத்தி மடி நோய் அறிகுறியை அறிந்து, சிகிச்சை அளிக்க தொடங்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story