பேரிடரில் சிக்கியவர்களை மீட்பது எப்படி?
பேரிடரில் சிக்கியவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி அதிக பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் பேரிடர் மீட்பு ஒத்திகை மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று கோத்தகிரி அரசு மேல்நிலை பள்ளியில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஹரிதேவ் பந்தர், கஜேந்திர சவுத்திரி ஆகியோர் தலைமையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 20 பேர் கலந்துகொண்டு, பேரிடர் ஏற்படுவதற்கான காரணங்கள், பேரிடர் ஏற்படாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பேரிடரில் சிக்கியவர்களை மீட்கும் முறைகள் குறித்து விளக்கியதோடு, செயல்விளக்கம் அளித்தனர். மண் சரிவு, மரம் விழுதல், வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது, பேரிடரில் சிக்கி காயமடைந்தவர்கள் மற்றும் பாம்பு கடித்தவர்களுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிப்பது என்பது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் பள்ளி ஆசிரியர்கள், வருவாய்த்துறையினர், பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.