கன மழையில் இருந்து பாதுகாப்பது எப்படி?
கன மழையில் இருந்து பாதுகாப்பது எப்படி?
போடிப்பட்டி,
கன மழையிலிருந்து பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் தெரிவித்துள்ளார்.
வடிகால்கள்
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்தநிலையில் கன மழையினால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கான வழிகாட்டல்களை குடிமங்கலம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் கோபிநாத் வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
கனமழையின் போது சாகுபடி நிலங்களில் தண்ணீர் தேங்குவதால் பயிர் அழுகி வீணாவதைத் தடுக்க முறையான வடிகால்கள் அமைக்க வேண்டும். குறிப்பாக மரவள்ளி, பீட்ரூட் உள்ளிட்ட கிழங்கு வகைப் பயிர் சாகுபடி நிலங்களில் நீர் தேங்காமல் தடுக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
தவிர்க்க முடியாத நிலைகளில் 75 சதவீதத்திற்கு மேல் விளைச்சல் கண்ட வாழை உள்ளிட்டவற்றை அறுவடை செய்வது நல்லது. மேலும் காற்றினால் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க மா, கொய்யா, முந்திரி உள்ளிட்ட பழ வகை மரங்களில் கூடுதல் சுமையைக் குறைக்கும் விதமாக காய்ந்த மற்றும் பட்டுப் போன குச்சிகளை கவாத்து செய்ய வேண்டும்.வாழை மரங்களில் கீழ் மட்ட இலைகளை அகற்றி விட்டு மண் அணைப்பதன் மூலமும், முட்டு கொடுப்பதன் மூலமும் பாதிப்பைத் தவிர்க்கலாம்.
அதுபோல குச்சி பந்தல் அமைத்து கொடி வகை காய்கறிகள் சாகுபடி செய்பவர்கள் மண் அனைத்தும், வலுவிழந்த பகுதிகளில் கூடுதல் ஊன்றுகோல்கள் அமைத்தும் பந்தல் சாய்வதைத் தடுக்கலாம்.மிளகாய், கத்தரி, தக்காளி போன்ற பயிர்களின் அடிப்பகுதியில் மண் அணைத்து சேதத்தைத் தவிர்க்கலாம்.நிழல் வலைக் குடில்கள் பயன்படுத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதன் அடிப்பாகம் இணைப்புக் கம்பிகளால் பலமாக நிலத்துடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.மேலும் கனமழையால் ஏற்படும் இழப்பைத் தவிர்க்கும் விதமாக நீர் பாய்ச்சுதல், உரம் இடுதல், மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளை விவசாயிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.