பிளஸ்-2 தமிழ் பாடத்தேர்வு எப்படி இருந்தது?-மாணவ-மாணவிகள் கருத்து


பிளஸ்-2 தமிழ் பாடத்தேர்வு எப்படி இருந்தது?-மாணவ-மாணவிகள் கருத்து
x

பிளஸ்-2 தமிழ் பாடத்தேர்வு எப்படி இருந்தது என்பது குறித்து புதுக்கோட்டையை சேர்ந்த அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தெரிவித்ததாவது:-

புதுக்கோட்டை

தேர்வு எளிதாக இருந்தது

புதுக்கோட்டையை சேர்ந்த அக்ஷயா:- நான் பிளஸ்-2 அறிவியல் பாடப்பிரிவு படித்து வருகிறேன். தமிழ் பாடத்தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. கேள்விகள் பெரும்பாலும் படித்தவையாக இருந்தது. ஒரு மார்க் கேள்வி மட்டும் எனக்கு சற்று கடினமாக தெரிந்தது. மற்ற கேள்விகள் எல்லாம் நல்ல முறையில் எழுதி உள்ளேன். மற்ற தேர்வுகளும் எளிதாக இருக்கும் என நம்புகிறேன்.

விராலிமலையை சேர்ந்த ஆகாஷ்:- தமிழ் பாடத்தேர்வு எளிமையாக இருந்தது. அரசு பொதுத்தேர்வு என்பதால் பள்ளிக்கு வரும் வரை ஒருவித அச்சம் இருந்தது. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெற்றது. அதில் முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை வாசிப்பதற்கு ஒதுக்கப்பட்டது. இந்த நேர ஒதுக்கீடு எனக்கு மட்டுமின்றி அனைத்து மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஏனெனில் வினாவை வாசிக்கும் போதும், தேர்வு அறைக்குள் நுழைந்த போதும் இருந்த பதற்றம் குறைந்ததுடன் வினாவினை நன்கு படித்து அதற்கு சரியான பதிலை எழுதுவதற்கு வாய்ப்பாக அமைந்தது. அதன் பின்னர் இருக்கும் 3 மணி நேரத்தில் பதற்றமின்றி தேர்வு எழுத முடிந்தது. தமிழ் தேர்வில் புத்தகத்தில் இருந்தும், பொதுவான கேள்விகளும் இடம் பெற்றிருந்தன. எனினும் சுலபமாக இருந்ததால் தேர்வை நன்றாக எழுதியுள்ளேன்.

ஒரு மார்க் கேள்விகள் கடினம்

கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த அல்ரிஸ்வி:- தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக கூற முடியாது. ஏனென்றால் ஒரு மார்க் கேள்விகள் சற்று கடினமாகவே இருந்தன. மற்றபடி 2 மார்க், 5 மார்க் கேள்விகள் சுலபமாக இருந்தது. என்னுடன் தேர்வு எழுதிய பெரும்பாலான மாணவர்கள் இதே கருத்தை தான் தெரிவித்தனர்.

ஆலங்குடியை சேர்ந்த ரேவதி:- கணினி வணிகவியல் பாடப்பிரிவு படித்து வருகிறேன். ஒரு மார்க் கேள்வி மட்டும் சற்று கடினமாக ேகட்கப்பட்டு இருந்தது. மற்ற கேள்விகள் அனைத்தும் எளிதாக இருந்தது.

உற்சாகம் கொடுத்தது

கறம்பக்குடியை சேர்ந்த விஜயகுமார்:- கணினி அறிவியல் பிரிவில் படித்து வருகிறேன். தமிழ் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. ஆசிரியர்கள், பெற்றோர் கொடுத்த தன்னம்பிக்கையால் பதற்றம் இன்றி தேர்வு எழுதினேன். வினாத்தாளை படித்து பார்க்க, தேர்வு எழுதிய விடைத்தாளை சரிபார்க்க நேரம் வழக்கப்பட்டதால் மிகவும் சகஜமாக தேர்வு எழுத முடிந்தது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வழங்கிய வாழ்த்து செய்தி மாணவர்களுக்கு உற்சாகம் கொடுத்தது.

பிளஸ்-2 தேர்வு என் போன்ற மாணவர்களை அடுத்த இலக்கை நோக்கி நகர்த்தி செல்லும் என்பதால் சற்று பயம் இருந்தது. இந்த தேர்வு மிக எளிமையாக இருந்ததால் அந்த பயமும் நீங்கி விட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story