பாலாற்று தண்ணீரில் இறங்கி மனித சங்கிலி போராட்டம்
வேலூரை அடுத்த கீழ்மொணவூர்-திருமணி இடையே பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கக்கோரி தண்ணீரில் இறங்கி பொதுமக்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூரை அடுத்த கீழ்மொணவூர்-திருமணி இடையே பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கக்கோரி தண்ணீரில் இறங்கி பொதுமக்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மனித சங்கிலி போராட்டம்
வேலூரை அடுத்த கீழ்மொணவூர்-திருமணி இடையே பாலாற்றில் தரைப்பாலம் அமைக்கக்கோரி பாலாறு பாதுகாப்பு சமூக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு அந்த இயக்க அமைப்பாளர் மார்த்தாண்டன் தலைமை தாங்கினார். திருமணி ஊராட்சிமன்ற தலைவர் அண்ணாதுரை, துணைத்தலைவர் பத்மாவதி ராமமூர்த்தி, கீழ்மொணவூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலாறு பாதுகாப்பு சமூக விழிப்புணர்வு இயக்க நிர்வாகி விஜயா வரவேற்றார்.
இதில், மேல்மொணவூர், கீழ்மொணவூர், லத்தேரி, திருமணி, டி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், கட்டுமான தொழிலாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், பாலாறு பாதுகாப்பு சமூக விழிப்புணர்வு இயக்க நிர்வாகிகள் என்று 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கீழ்மொணவூரில் இருந்து திருமணி வரை பாலாற்றில் ஓடும் தண்ணீரில் இறங்கி நின்று தரைப்பாலம் அமைத்து தரக்கோரி கையில் பதாகைகளை ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினார்கள்.
தரைப்பாலம் அமைக்க கோரிக்கை
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், வேலூர் பாலாற்றின் குறுக்கே கீழ்மொணவூர்-திருமணி இடையே தரைப்பாலம் அமைக்கக்கோரி கடந்த 8 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேல்மொணவூர், கீழ்மொணவூர் பகுதியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தொழிலாளர் அலுவலகம், அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையம், ஷூ தயாரிப்பு நிறுவனங்கள் உள்பட அரசு, தனியார் நிறுவனங்கள் உள்ளன. எனவே இந்த பகுதிக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.
கீழ்மொணவூர்-திருமணி இடையே பாலாற்றில் பொதுமக்கள் சொந்த செலவில் மண்பாதை அமைத்து பயன்படுத்தி வந்தோம். அந்த பாதை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. தற்போது ஓராண்டிற்கு மேலாக திருமணி பகுதியில் இருந்து 20 கிலோ மீட்டர் சுற்றி மேல்மொணவூருக்கு வரும் நிலை உள்ளது. பொதுமக்களின் சிரமத்தை போக்க இந்த பகுதியில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்று கூறினார்கள்.
பாலாற்று தண்ணீரில் இறங்கி பொதுமக்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டதால் விரிஞ்சிபுரம், லத்தேரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.