சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்


சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:24 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை, சீர்காழியில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை, சீர்காழியில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

மனித சங்கிலி போராட்டம்

மயிலாடுதுறையில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலைச்சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது. இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஏ.சீனிவாசன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஷேக் அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

மனித சங்கிலி போராட்டம் கிட்டப்பா அங்காடி முன்பு நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் காந்திஜி சாலை, கச்சேரி சாலை ஆகிய பகுதிகளில் மனித சங்கிலியாக நின்று கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜ்குமார் எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் இடும்பையன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர்கள் வக்கீல் வேலுகுணவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சீர்காழி

சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் மதநல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் காமராஜ் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளர் கனிவண்ணன், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் நீதி சோழன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.


Next Story