கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
சேலத்தில் கடன் தொல்லையால் கணவன்-மனைவி தங்கும் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பங்கு சந்தையில் நஷ்டம்
கோவை பீளமேடு கோபால்நகரை சேர்ந்தவர் மோகன்பாபு (வயது 57). இவருடைய மனைவி ஜெயந்தி (50). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மோகன்பாபு பங்கு சந்தையில் (ஷேர்மார்க்கெட்) பணத்தை முதலீடு செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பங்கு சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்தார்.
இந்தநிலையில், கடந்த 11-ந் தேதி கோவையில் இருந்து மோகன்பாபு, ஜெயந்தி ஆகிய இருவரும் பஸ் ஏறி சேலத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் புதிய பஸ் நிலையம் அருகே சினிமா நகரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர். ஆனால் கடந்த 2 நாட்களாக அவர்களது அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் நேற்று மாலை பள்ளப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
கணவன்-மனைவி தற்கொலை
அதன்பேரில் போலீசார் தனியார் விடுதிக்கு சென்று, மோகன்பாபு தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு மோகன்பாபு மற்றும் ஜெயந்தி ஆகியோர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அவர்களது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பங்கு சந்தையில் முதலீடு செய்து நஷ்டம் ஏற்பட்டதால் கடன் தொல்லை ஏற்பட்டதாகவும், இதனால் விரக்தி அடைந்த மோகன்பாபு, தனது மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதும் தெரியவந்தது. கடந்த 5-ந் தேதி வீட்டில் இருந்து வெளியேறிய அவர்கள் இருவரையும் காணவில்லை என்று அவர்களது குடும்பத்தினர் கோவை பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
கடிதம் சிக்கியது
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அவர்களை தேடி வந்தநிலையில் தற்போது கணவன்-மனைவி இருவரும் சேலத்தில் தனியார் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதவிர, தற்கொலை செய்து கொண்ட விடுதியில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் ஏற்பட்டதாலும், கடன் தொல்லை அதிகமாக இருந்ததாலும் இருவரும் தற்கொலை முடிவை எடுத்துள்ளோம். எங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை, என்று உருக்கமாக அவர்கள் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பாக பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.