விபத்தில் கணவன்-மனைவி படுகாயம்
சிவகிரி அருகே விபத்தில் கணவன்-மனைவி படுகாயம் அடைந்தனர்.
சிவகிரி:
சிவகிரி அருகே உள்ள தென்மலை வடக்கு தெருவை சேர்ந்தவர் முனீஸ்வரன் (வயது 42). இவரது மனைவி குருவம்மாள் (40). இவர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் துரைச்சாமியாபுரத்தில் இருந்து தென்மலை நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அவர்களுக்கு முன்னால் லோடு ஆட்டோ சென்று கொண்டு இருந்தது. அதை முந்திச் செல்ல முயன்ற போது, குருவம்மாள் கையில் இருந்த சாந்துசட்டி லோடு ஆட்டோவில் உரசியது. இதில் நிலைதடுமாறிய முனீஸ்வரன், குருவம்மாள் ஆகியோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.