தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
கர்ப்பிணி தூக்குப்போட்டு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது செய்யப்பட்டார்.
ராமநத்தம்,
ராமநத்தம் அருகே ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் கணபதி (வயது 32). இவரும், அதே பகுதியை சேர்ந்த ராமநாதன் மகள் சத்யா(19) என்பவரும் காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இதில் சத்யா, 3 மாத கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் கணபதி மற்றும் அவருடைய தாய் அம்புஜம் ஆகியோர் சேர்ந்து சத்யாவிடம், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சத்யா நேற்று முன்தினம், வீட்டின் பின்புறத்தில் உள்ள வேப்ப மரத்தில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கணபதி, அவரது தாய் அம்புஜம் ஆகியோர் சேர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால், அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக கணபதி மற்றும் அம்புஜம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கணபதியை கைது செய்தனர். மேலும் அம்புஜத்தை தேடி வருகின்றனர்.