இளம்பெண்ணை கொன்று நாடகமாடிய கணவர் கைது


இளம்பெண்ணை கொன்று நாடகமாடிய கணவர் கைது
x
தினத்தந்தி 14 Nov 2022 12:15 AM IST (Updated: 14 Nov 2022 10:58 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் இளம்பெண்ணை கொன்று நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர். அந்த பெண்ணை கழுத்தை நெரித்து தீர்த்துக்கட்டியது அம்பலமானது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் இளம்பெண்ணை கொன்று நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர். அந்த பெண்ணை கழுத்தை நெரித்து தீர்த்துக்கட்டியது அம்பலமானது.

மேலும் இந்த பரபரப்பு சம்பவம் போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பெண் திடீர் சாவு

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி பகுதியை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 29). இவருடைய மனைவி ரெஜினா பானு (26). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். முகமது உசேன் 6 ஆண்டுகளுக்கு முன்பு குமரி மாவட்டத்துக்கு வேலைக்காக வந்தார். நாகர்கோவில் புன்னைநகர் பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்தார். மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்தார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று ரெஜினா பானு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரெஜினா பானு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

பிரேத பரிசோதனையில் அம்பலம்

இதுதொடர்பாக ரெஜினா பானு இறந்தது எப்படி? என நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது உசேனிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர், ரெஜினா பானு சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றதாகவும், மறுநாள் காலையில் நீண்ட நேரமாகியும் எழுந்திருக்காததால், அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றதாக தெரிவித்தார். போலீசாரின் குறுக்கு விசாரணையின் போது முகமது உசேன் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் போலீசாரின் சந்தேகப்பார்வை அவர் மீது விழுந்தது.

இந்த நிலையில் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ரெஜினா பானுவின் உடல் பிரேத பரிசோதனை நடந்தது. அப்போது அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது அம்பலமானது.

கணவர் கைது

பின்னர் முகமது உசேனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது குடும்ப தகராறு காரணமாக ரெஜினா பானுவை முகமது உசேன் கொலை செய்து விட்டு நாடகமாடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் முகமது உசேனை அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

எனக்கும், ரெஜினா பானுவுக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு வேலைக்காக நாங்கள் குமரி மாவட்டத்துக்கு வந்தோம். புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்த எனக்கும், எனது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

தற்கொலை மிரட்டல்

சம்பவத்தன்று நான் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த போது எனக்கும், மனைவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மனைவி ரெஜினா பானு தற்கொலை செய்யப்போவதாக கூறி கழுத்தில் துணியை மாட்டிக் கொண்டு மிரட்டினார். அப்போது நான் அவரை சமாதானம் செய்தேன். அதன்பிறகும் சமாதானம் அடையாததால், ஆத்திரத்தில் மனைவியின் கழுத்தை நானே நெரித்தேன். அப்போது அவர் இறந்து விட்டார்.

உடனே அவரை தூங்குவதுபோல் படுக்கையில் படுக்க வைத்து விட்டு, அருகில் உள்ள அறைக்கு சென்று படுத்து தூங்கினேன். மறுநாள் காலையில் குழந்தைகளும் கண் விழித்தனர். அப்போது தாயார் எழும்பாததால் என்னிடம் கேட்டனர். அப்போது குழந்தைகளிடம் அம்மாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக நாடகமாடினேன். அதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ரெஜினாபானுவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றேன். அங்கு எனது மனைவி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனாலும் போலீசார் என்னை பிடித்து விசாரணை நடத்திய போது உண்மையை ஒப்புக் கொண்டேன்.

இவ்வாறு வாக்குமூலத்தில் முகமது உசேன் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் அவர் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, மாவட்ட ஜெயிலில் அடைக்கப்பட்டார். மனைவியை கொலை செய்து விட்டு புரோட்டா மாஸ்டர் நாடகம் ஆடிய சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story