புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவர் கைது
கரூரில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவரை போலீசார் கைது செய்தனர். மேலும், உருக்கமான கடிதம் சிக்கியது.
புதுப்பெண் தற்கொலை
கரூர் தாந்தோணிமலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ராகப்பிரியா (வயது 27). இவர் பொரணியில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும், சுதர்சன் என்பவருக்கும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில், சுதர்சன் மற்றொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்தது ராகப்பிரியாவிற்கு தெரியவந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட ராகப்பிரியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிந்து சுதர்சனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உருக்கமான கடிதம் சிக்கியது
இந்தநிலையில் ராகப்பிரியா வீட்டில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில், அன்புள்ள அக்காவிற்கு, அக்கா நீ எனக்கு இன்னொரு அம்மா. என் மனசு உனக்கு நல்லா புரியும். விபிஷனாவை நல்லா படிக்க வைக்கா. நான் உன் கூட தெய்வமாக இருப்பேன். உன்னிடம் நான் பட்ட கடனை நிலமாக வைத்துக்கொள். தாத்தா ஐலவ்யூ உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்.
அம்மாயி நீ என் கூட எப்போதும் அம்மா மாதிரி திட்டிக்கிட்டு ஜாலியா இருந்தாய் ஐலவ்யூ அம்மாயி. தாத்தா-அம்மாயி நீங்கள் எனக்கு இன்னொரு உலகம். நான் உங்களை விட்டு செல்ல என் திருமண வாழ்க்கை தான் முக்கிய காரணம். சுதர்சன் நல்ல கணவர் இல்லை, அவனுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் தொடர்பு உள்ளது. என் இறப்புக்கு முக்கிய காரணம் அந்த ெபண்ணும், சுதர்சனும் தான்.
கணவர் தான் காரணம்
பிப்ரவரி 23-ந்தேதி எனக்கு கல்யாணம் ஆனது. என் கணவருடன் இல்லற வாழ்வில் 2 நாட்கள் மட்டும் தான் மகிழ்ச்சியாக இருந்தேன். சுதர்சனுக்கு என்மேல் துளி கூட விருப்பமில்லை என்பதை 13 நாட்களில் புரிந்து கொண்டேன். என்னை மனதளவில் மிகவும் பாதிப்படைய செய்தது. சுதர்சனின் வெறுப்பான வார்த்தைகள் தான் சிடுசிடு என்று முகம் இருப்பினும், எனது குடும்பத்திற்காக அனைத்தையும் தாங்கிக் கொண்டேன்.
சுதர்சனின் தாய்-தந்தை மிகவும் நல்லவர்கள். அவர்களின் மேல் எனக்கு எந்த விதமான மனகசப்பும் இல்லை. என்னை நன்றாக பார்த்துக் கொண்டனர். சுதர்சனுக்கும் அந்த பெண்ணுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என அந்த கடிதத்தில் எழுதப்பட்டு இருந்தது.
சமூக வலைதளங்களில் வீடியோ
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ராகப்பிரியா 2.50 நிமிடம் பேசிய வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் அக்கா-தாத்தா எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். அவன் நல்லவன் இல்லை. மோசமான பையன். வேறு பெண்ணோடு பழக்கம் இருக்கு. எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க என அதில் உள்ளது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.