குரும்பூர் அருகே பேரூராட்சி கவுன்சிலரின் கணவர் சரமாரி வெட்டிக் கொலை
குரும்பூர் அருகே பட்டப்பகலில் பேரூராட்சி கவுன்சிலரின் கணவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
தென்திருப்பேரை:
குரும்பூர் அருகே பட்டப்பகலில் பேரூராட்சி கவுன்சிலரின் கணவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
கவுன்சிலர் கணவர்
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள ராணிமகாராஜபுரத்தை சேர்ந்த முத்துநாடார் மகன் சரவணக்குமார் (வயது 39). இவர் நாடார் மக்கள் இயக்க பொது செயலாளராக இருந்து வந்தார்.
இவருடைய மனைவி மரிய நிர்மலாதேவி (35). இவர் ஆறுமுகநேரி பேரூராட்சி 14-வது வார்டில் சுயேச்சை கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பின்னர் அவர் தி.மு.க.வில் இணைந்தார்.
வெட்டிக் கொலை
இந்த நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் சரவணக்குமார் டீக்குடிப்பதற்காக சென்றார். அப்போது, ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் கொண்ட மர்மநபர்கள் வந்தனர்.
அவர்கள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சரவணக்குமாரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. அதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரவணக்குமார் பரிதாபமாக இறந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் அங்கு இருந்து தப்பிச் சென்று விட்டனர்.
போலீஸ் சூப்பிரண்டு விரைந்தார்
இதுகுறித்து உடனடியாக குரும்பூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
கொலை செய்யப்பட்ட சரவணக்குமார் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
காரணம் என்ன?
அதில், கடந்த 2019-ம் ஆண்டு செல்வக்குமாரின் தம்பி குமார் என்பவரை சிலர் கொலை செய்தனர். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர்கள் தற்போது, சரவணக்குமாரையும் கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான நிலங்களை சிலர் அனுபவித்து வருகிறார்கள். இதில் செல்வக்குமாரும் சேர்ந்து நிலத்தை அனுபவிக்க விரும்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரை யாரேனும் மர்ம நபர்கள் கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. எனினும் கொலைக்கு இதுதான் காரணமா?, அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வலைவீச்சு
இந்த கொலை சம்பவம் குறித்து குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
குரும்பூர் அருகே பட்டப்பகலில் பேரூராட்சி கவுன்சிலரின் கணவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.