கந்துவட்டி கேட்டு மனைவியை அழைத்துச் சென்றதால் விஷம் குடித்த கணவர்; வக்கீல் மீது வழக்கு
கந்துவட்டி கேட்டு மனைவியை அழைத்துச் சென்றதால் அவரது கணவர் விஷம் குடித்தார். இதுதொடர்பாக வக்கீல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இட்டமொழி:
பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சேர்ந்தவர் கந்தையா (வயது 40). வக்கீலான இவரிடம் மூலைக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் வட்டிக்கு ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியதாகவும், இதற்காக அவர் கந்தையாவிடம் வாரம் தோறும் வட்டி பணம் செலுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக தொழிலாளி வட்டி பணம் செலுத்தவில்லை. இதனால் கந்தையா அடிக்கடி தொழிலாளியிடமும், அவருடைய மனைவியிடமும் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று தொழிலாளியின் மனைவி வேலை செய்து வந்த ஜவுளி கடைக்கு சென்று, அவரை கந்தையா அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது தொழிலாளி பணம் தந்ததும் அவரது மனைவியை விடுவிப்பதாக கூறியுள்ளார். இதனை அறிந்த தொழிலாளி மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதையடுத்து தொழிலாளியின் மனைவியை கந்தையா வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், மூலைக்கரைப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கந்தையாவை வலைவீசி தேடி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.