ஈரோடு: மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை


ஈரோடு: மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை
x

ஈரோடு:

ஈரோடு ஆசிரியர் காலனி அவ்வையார் வீதியை சேர்ந்தவர் விவேகானந்தன் (வயது 30). கொசு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு தீபரஞ்சனி (24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தீபரஞ்சனி ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் காப்பீடு திட்ட முகவராக பணியாற்றினார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

இதற்கிடையில் தீபரஞ்சனியின் நடத்தையில் விவேகானந்தன் சந்தேகப்பட்டு வந்ததால், கணவன்-மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதேபோல், கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ந்தேதி இரவு விவேகானந்தன், தீபரஞ்சனியின் நடத்தை குறித்து பேசியதால், கணவன்-மனைவிக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த விவேகானந்தன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தீபரஞ்சனியின் உடலில் பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தி உள்ளார். ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்த தீபரஞ்சனியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே தீபரஞ்சனி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, விவேகானந்தனை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு ஈரோடு மகிளா கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

இந்த நிலையில், வழக்கின் இறுதி விசாரணை முடித்து, நீதிபதி மாலதி தீர்ப்பளித்தார். அவர் தனது தீர்ப்பில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக விவேகானந்தனுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் மற்றொரு பிரிவில் ஒரு மாத சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், இந்த தண்டனைகளை விவேகானந்தன் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.


Next Story