மனைவியின் கள்ளக்காதலை கண்டித்த கணவர் கழுத்து நெரித்து கொலை: 2 பேர் கைது
கரூர் அருகே மனைவியின் கள்ளக்காதலை கண்டித்த கணவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் நண்பருடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொழிலாளி
கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா கீரனூர் அருகே உள்ள குன்னுடையான் கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது 39). இவர் கரூரில் உள்ள தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி கலைவாணி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 8-ந்தேதி காலை வழக்கம்போல் கரூருக்கு வேலைக்கு சென்ற ராஜீவ்காந்தி இரவு வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் 9-ந்தேதி காலை லாலாபேட்டை அருகே உள்ள பஞ்சப்பட்டி டாஸ்மாக் அருகே ராஜீவ்காந்தி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜீவ்காந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தினர்.
மனைவி கண்டிப்பு
போலீசாரின் விசாரணையில் தெரியவந்த விவரம் பின்வருமாறு:-
ராஜீவ்காந்தியின் மனைவி கலைவாணிக்கும் மாயனூர் அருகே கட்டளையை சேர்ந்த நிவாஸ் (24) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
இதையறிந்த ராஜீவ்காந்தி, கலைவாணியையும், நிவாசையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நிவாஸ் ராஜீவ்காந்தியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
அதன்படி கடந்த 8-ந்தேதி இரவு வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு ராஜீவ்காந்தி வந்து கொண்டிருந்தார். அப்போது, நிவாசும், அவரது நண்பரான பழைய ஜெயங்கொண்டத்தை சேர்ந்த கருப்பசாமி (26) ஆகியோர் சேர்ந்து ராஜீவ்காந்தியிடம் போனில் உங்களிடம் பேச வேண்டும் எனக்கூறி சேங்கல் பகுதிக்கு வரவழைத்துள்ளனர்.
கழுத்தை ெநரித்து கொலை
பின்னர் அங்கு 3 பேரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது மதுபோதையில் இருந்த ராஜீவ்காந்தியை நிவாஸ் தனது நண்பர் கருப்பசாமியுடன் சேர்ந்து துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் ராஜீவ் காந்தியின் உடலை மோட்டார் சைக்கிளில் வைத்து கொண்டு வந்து பஞ்சப்பட்டி டாஸ்மாக் அருகே போட்டு விட்டு சென்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து நிவாஸ் மற்றும் கருப்பசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.