கணவன்- மனைவி தற்கொலை
வேப்பனப்பள்ளியில் கணவன்- மனைவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
வேப்பனப்பள்ளி:-
வேப்பனப்பள்ளியில் கணவன்- மனைவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கணவன்- மனைவி
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஹைதர் அலி (வயது 45). இவருடைய மனைவி ஷானுமா (40). இவர்களுக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கணவன்- மனைவி இருவரும் பை செய்யும் தொழில் செய்து வந்தனர்.
நேற்று காலையில் பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினர். அதன்பிறகு கணவன்- மனைவி இருவரும் வீட்டிலேயே இருந்தனர். மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்த பிள்ளைகள் வீட்டுக்குள் சென்றனர்.
தூக்கில் பிணங்கள்
அங்கு ஒரு அறையில் ஹைதர் அலி தூக்கில் பிணமாக தொங்கினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பிள்ளைகள் கதறி அழுதன. உடனே தாயை தேடினார்கள். மற்றொரு அறையில் ஷானுமா தூக்கில் பிணமாக தொங்கினார். இதைக்கண்டும் பிள்ளைகள் கதறி அழுதனர். அவர்களது அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.
கணவன்- மனைவி இருவரும் வெவ்வேறு அறைகளில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுபற்றி வேப்பனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
தகவல் அறிந்த மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அக்கம் பக்கத்தில் உள்ளவரிடமும், பிள்ளைகளிடமும் விசாரணை நடத்தினர். கணவன்- மனைவி இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கணவன்- மனைவி தற்கொலைக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இருந்தாலும் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கணவன்- மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேப்பனப்பள்ளி பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.