நான் தனியாகி விட்டேனே...


நான் தனியாகி விட்டேனே...
x

ஆற்றூர் அருகே மின்சாரம் தாக்கி 3 பேர் பலியான சம்பவத்தில், நான் குடும்பத்தையே இழந்து தனியாகி விட்டேன் என வியாபாரி கதறி அழுதார்.

கன்னியாகுமரி

திருவட்டார்:

ஆற்றூர் அருகே மின்சாரம் தாக்கி 3 பேர் பலியான சம்பவத்தில், நான் குடும்பத்தையே இழந்து தனியாகி விட்டேன் என வியாபாரி கதறி அழுதார்.

மின்சாரம் தாக்கி 3 பேர் பலி

ஆற்றூர் அருகே தொப்பவிளை பகுதியை சேர்ந்தவர் சேம் (வயது 51). வாழை வியாபாரியான இவருடைய மனைவி ஜெயசித்ரா (45). இவர்களுடைய மகன் அஸ்வின் (21) கன்னியாகுமரி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.

மகள் ஆதிரா (25) 8 மாத கர்ப்பிணியான நிலையில் பெற்றோர் வீட்டில் தங்கி வந்தார். மேலும் அவருக்கு வளைகாப்பும் நடத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலையில் மழை பெய்த போது பக்கத்து வீட்டில் இருந்த தகரம் மீது இரும்பு கம்பி பட்டதில் மின்சாரம் தாக்கி அஸ்வின், ஜெயசித்ரா, ஆதிரா ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். தகரம் மீது மின்சாரம் பாய்ந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 3 பேருடைய உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

வியாபாரி கதறல்

ஆதிராவின் உடல் பனவிளைக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்த நிலையில் இருந்தது. பிரேத பரிசோதனை செய்த போது அந்த குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.

மேலும் பலியான ஜெயசித்ரா, அஸ்வின் ஆகியோருடைய உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது அஸ்வினுடன் கல்லூரியில் படித்த மாணவர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் துக்கம் தாங்காமல் கதறி அழுதனர்.

மேலும், மனைவி, குழந்தைகளை இழந்து நான் தனியாகி விட்டேனே... என வியாபாரி சேம் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.மேலும் இதுதொடர்பாக அக்கம் பக்கத்தினர் கூறுகையில், சேம் கடன் வாங்கி தன்னுடைய வீட்டை சமீபத்தில் தான் புதுப்பித்திருந்தார். ஆதிராவின் திருமணத்தையும் கஷ்டப்பட்டு தான் நடத்தினார். எந்த குடும்பத்துக்காக வாழ்ந்தாரோ அவர்களையே பறிகொடுத்ததால் சேம் மிகவும் உடைந்து போய் விட்டார் என வேதனையுடன் தெரிவித்தனர்.


Next Story