படிக்க ஆர்வம் இருக்கு... பள்ளிக்கு அழைத்து செல்ல ஆள் இல்லையே...
படிக்க ஆர்வம் இருக்கு... பள்ளிக்கு அழைத்து செல்ல ஆள் இல்லையே...
அடர்ந்த வனம்... வானுயரந்த மரங்கள்.. எங்கும் நிசப்தம்... அதில் கீச், கீச்சென்று பட்சிகளின் அழகான சத்தம்... காற்றில் அசைந்தாடும் மரங்களால் ஏற்படும் திகில் நிறைந்த ஓசை.... என அடர்ந்த வனப்பகுதியில் அத்தனை திகிலும் அதில் நிறைந்து இருக்கும். இங்கு யானையும் அசைந்தாடிச்செல்லும்... சிறுத்தையும் போகும்... புலியும் நடமாடும்... ஓநாய்களும் ஊளையிடும்... குயிலும் பாடும்... மயிலும் ஆடும்... இது தான் எங்கள் வீடு... என்கிறார்கள் பழங்குடியின மக்கள்.
ஆம்... மாசு இல்லாத... இயற்கை நிறைந்த இந்த சொர்க்க பூமியில் (அடர்ந்த வனப்பகுதியில்) தான் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் அன்றன்று தங்கள் தேவையாக பூர்த்தி செய்து கொள்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வேட்டையாடுவது, தேன் எடுப்பது, கிழங்கு பறிப்பது, விவசாயம் செய்வது உள்ளிட்ட பல்வேறு வேலைகளை செய்து வருகின்றனர். இவர்கள் வனத்தை நம்பியே தங்களது குடும்பத்தை நடத்தி வருகின்றனர். நகர மக்களுக்கும், இவர்களுக்கும் அதிக வேறுபாடுகள் இருப்பது இன்றளவும் உள்ளது.
17 பழங்குடியின கிராமங்கள்
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் 17 பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இதில் பழைய சர்க்கார்பதி என்ற கிராமத்தில் 110-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள குழந்தைகள் படிப்பதற்கு வசதியாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்கள் மேல்படிப்புக்காக சேத்துமடை, வேட்டைக்காரன்புதூர் மற்றும் ஆனைமலைக்குதான் வர வேண்டும்.
பஸ் வசதி இல்லை
ஆனால் இங்கிருந்து 5 கி.மீ. தூரம் கொண்ட சேத்துமடை பகுதிக்கு செல்ல பஸ்வசதி இல்லை. இந்த பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதாலும், குறுகிய வளைவுகள் கொண்ட பகுதி என்பதாலும் பஸ்விடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏழை-எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் மேற்படிப்புக்கு செல்ல முடியவில்லை. அதன்படி கடந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்ேதர்வை 34 பேர் எழுதவில்லை.
இதை அறிந்த வனத்துறையினர், இந்த பகுதியை சேர்ந்த குழந்தைகள் மேற்படிப்பு செல்ல வசதியாக தனியார் அமைப்புடன் சேர்ந்து பேட்டரி வாகனத்தை ஏற்பாடு செய்து கொடுத்தனர். அந்த வாகனத்தை அந்தப்பகுதியை சேர்ந்த ஒருவர் தினமும் இயக்கி வந்தார். இதன் காரணமாக இந்த பகுதியை சேர்ந்த ஏழை-எளிய குழந்தைகள் எவ்வித கஷ்டமும் இல்லாமல் மேல்நிலை கல்வி கற்பதற்காக பள்ளிக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் திடீரென்று அந்த பேட்டரி வாகனத்தை இயக்க ஆள் இல்லை. இதனால் கடந்த 3 மாதமாக பேட்டரி வாகனம் இயக்கப்படாமல், பழைய சர்க்கார்பதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் இந்த வாகனத்தில் சென்று வந்த குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
இதுகுறித்து பழங்குடியின மக்கள் கூறியதாவது:-
எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்வது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் எங்கள் பகுதியில் 5-ம் வகுப்பு வரை மட்டுமே படிக்க வசதி உள்ளது. உயர் கல்விக்காக அடர்ந்த வனப்பகுதி வழியாக நடந்து, செல்ல வேண்டி உள்ளது. இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து சென்றுவிடுகின்றனர். ஆனால் வாகன வசதி இல்லாதவர்கள் நடந்துதான் செல்ல வேண்டும். வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக மாலை நேரத்தில் திரும்பிவரும்போது, குழந்தைகள் அச்சத்துடன் வரவேண்டிய நிலை நீடித்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 3 மாதங்களாக 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே உள்ளனர். அவர்களுக்கு படிக்க ஆர்வம் இருந்தும். பள்ளிக்கு அழைத்து செல்ல வாகன வசதி இல்லை. இதனால் அவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. சிலர் சிறுவயதிலேயே கூலி வேலைக்கு செல்கின்றனர். எனவே பழங்குடியின மக்களின் கல்வியையும், வாழ்வையும் உயர்த்த எங்களின் குழந்தைகள் தடையின்றி மேல்நிலை கல்வியை பெற போதிய வசதிகளை வனத்துறையினர் மற்றும் கல்வித்துறையினர் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.