"நான் நலமாகவே இருக்கிறேன்" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால் மருத்துவர்கள் 2 நாட்கள் கண்டிப்பாக ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்கள். எனவே ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த நிகழ்ச்சிகள் நடக்கும் மாற்று தேதி முறைப்படி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உடல்நிலை குறித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுது மடல்,.. "தொடர்ச்சியான பணிகள்-தட்பவெப்ப மாற்றம் ஆகியவற்றால் உங்களில் ஒருவனான எனக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக இன்று ராணிப்பேட்டை மாவட்டத்திலும், நாளை(21.06.2022) திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களிலும் பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன.
பதற்றப்பட வேண்டிய அளவில் எதுவும் இல்லை. லேசான காய்ச்சல் என்பதால் மருத்துவர்கள் அறிவுரைப்படி அதற்குரிய மருந்துகளுடன் கொஞ்சம் ஓய்வும் எடுக்க வேண்டியதாகிவிட்டது. இன்றும் நாளையும் சற்று ஓய்வெடுக்கும் வாய்ப்பு அமைந்தால் அதன்பின் எப்போதும் போல பணியினைத் தொடர்ந்திட முடியும். நான் நலமாகவே இருக்கிறேன்.
பணிகளை தொடர்ந்திடுவேன். ஓய்வில் இருந்தாலும் பணிகளை முகாம் அலுவலகத்தில் இருந்து அத்தியாவசியப் பணிகளை மேற்கொண்டவாறே இருக்கிறேன்! மக்களின் தேவைகளை அவர்களுக்கான வசதிகளை நிறைவேற்ற வேண்டிய முதல்-அமைச்சர் என்ற பொறுப்பைச் சுமந்துள்ள நிலையில், அந்த பொறுப்பை வழங்கியது, கழகம் எனும் பேரியக்கித்தின் வெற்றிதான் என்பதை நான் ஒரு நொடிப் பொழுதும் மறந்ததில்லை.
கழகத்தினரும் உட்கட்சித் தேர்தலில் தனிமனித முனைப்பைவிட இயக்கத்தின் உறுதித்தன்மையே முதன்மை எனப் பணியாற்றிடுங்கள். ஜுலை-3 நாமக்கல்லில் சந்திப்போம்!
இவ்வாறு அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.