'எனக்கு யாரும் இலக்கு வைக்கவில்லை... எனக்கு நானே இலக்கு வைத்துக்கொள்கிறேன்'; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


எனக்கு யாரும் இலக்கு வைக்கவில்லை... எனக்கு நானே இலக்கு வைத்துக்கொள்கிறேன்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

எனக்கு யாரும் இலக்கு வைக்கவில்லை. எனக்கு நானே இலக்கு வைத்துக்கொள்கிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் புதிய திட்டங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டம், திருநங்கையர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ. 1 ஆயிரத்து 500 ஆக உயர்வு, முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் விரிவாக்கம், பல்வேறு அரசுப்பணிகளில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை, ரூ. 1 ஆயிரத்து 136 கோடியில் பல்வேறு மருத்துவமனை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்குதல், சென்னை மாநகர பகுதியில் கழிவுநீர் அகற்றும் பணிகளை நவீனப்படுத்தி, தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களை தொழில்முனைவோர்களாக ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்கான சிறப்பு திட்டம் ஆகிய 7 புதிய திட்டங்களை முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் பேசியதாவது:-

குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர், உயர்தர கல்வி, உயர்தர மருத்துவம் இலக்கை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு முன் முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம் முதல்-அமைச்சராக பதவி ஏற்ற உடன் முதலில் கையெழுத்திட்ட கோப்பு மகளிர் இலவச பேருந்து பயணம் மகளிர் மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது.

இளைஞர்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் வகையில் உள்ள நான் முதல்வன் திட்டம் தமிழக மாணவர்கள், இளைஞர்களை கல்வி, சிந்தனை திறனில் முன்னேற்றவே நான் முதல்வர் திட்டம் ஓராண்டு காலத்தில் 17 லட்சத்திற்கு அதிகமாக திறமைசாலிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

திமுக அரசு 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய முதலீடுகளை ஈர்த்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்கான செயல் திட்டத்தை ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கூறினேன்.

ரூ.49 ஆயிரத்து 385 கோடி மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. தூய்மைப் பணியாளர்கள் தொழில் முனைவோர்களாக மாற்ற தனியாருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

நாளை மார்ச் 1 எனது 70வது பிறந்தநாள். சுமார் 52 ஆண்டுகாலம் காலம் அரசியலையே எனது வாழ்க்கையாக அமைத்து கொண்டுள்ளேன். அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் என்னவாகியிருப்பீர்கள் என்று கேட்டபோது அரசியலில் தான் நிச்சயம் இருந்திருப்பேன் என்று பதில் கூறியவன் நான். கிடைக்கின்ற பொறுப்புக்களின் மூலம் மக்களுக்கு சேவையாற்றும் இலக்குகளை எல்லா காலத்திலும் எனக்கு நானே வைத்துக்கொள்கிறேன். எனக்கு யாரும் இலக்கு வைக்கவில்லை. எனக்கு நானே இலக்கு வைத்துக்கொள்கிறேன். அந்த இலக்கை அடையவே எந்நாளும் உழைக்கிறேன்' என்றார்.


Next Story