உயர்கல்வி, வேலை வாய்ப்புக்கான 'நான் முதல்வன்' நிகழ்ச்சி
பிளஸ்-2 முடித்த அரசு மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான 'நான் முதல்வன்' நிகழ்ச்சியை வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்து கையேட்டை வெளியிட்டார்.
பிளஸ்-2 முடித்த அரசு மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான 'நான் முதல்வன்' நிகழ்ச்சியை வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்து கையேட்டை வெளியிட்டார்.
'நான் முதல்வன்' நிகழ்ச்சி
அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்காக 'நான் முதல்வன்' என்ற நிகழ்ச்சி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. அத்தகைய உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டுதல் பயிற்சியான 'நான் முதல்வன்' நிகழ்ச்சி வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி மாணவர்களுக்கான கையேட்டை வெளியிட்டு பேசினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி வரவேற்றார்.
1,300 மாணவர்கள் பங்கேற்பு
நிகழ்ச்சியில் டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி., வி.ஐ.டி பல்கலைக்கழக துணைத்தலைவர் ஜி.வி.செல்வம், அமலு விஜயன் எம்.எல்.ஏ., வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் எம்.சுனில்குமார், மண்டலகுழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் விமலா சீனிவாசன், சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
'நான் முதல்வன்' நிகழ்ச்சியில் வேலூர் மாவட்டத்தை சார்ந்த பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தற்போது பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகள் என 1,300 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
பலதுறைகளை சேர்ந்த நிபுணர்கள்
இதில் மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், வங்கி, அரசு, விவசாயம், தொலைத்தொடர்பு, சட்டம் மற்றும் பாதுகாப்பு சேவைகள் போன்ற துறைகளை சார்ந்த நிபுணர்கள் கலந்துகொண்டு உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.
நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜெய்சங்கர், அனைவருக்கும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் மகாலிங்கம், மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், பாரத சாரணிய பொறுப்பாளர் சிவவடிவு மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் சம்பத்து நன்றி கூறினார்.