நள்ளிரவில் அரங்கேறிய அரசியல் அதிரடி; 'அண்ணன் பிடிஆர்-ஐ சந்தித்து மன்னிப்புகோரினேன்' - டாக்டர் சரவணன்


நள்ளிரவில் அரங்கேறிய அரசியல் அதிரடி; அண்ணன் பிடிஆர்-ஐ சந்தித்து மன்னிப்புகோரினேன் - டாக்டர் சரவணன்
x

பாஜகவில் இருந்து விலகுவதாக மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

மதுரை,

மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் இன்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் அவரது வீட்டிற்கு நேரில் சந்தித்தார்.

அதன் பின் பாஜக தலைவர் டாக்டர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

இன்று காலை (நேற்று) உங்கள் அனைவருக்கும் தெரியும் நமது ராணுவ வீரர், நாட்டுக்காக உயிர்நீத்த தம்பி லட்சுமணன் புதுப்பட்டியை சேர்ந்த அவரது பூத உடல் விமான நிலையத்திற்கு வந்தது.

அனைவரும் போல பாஜக சார்பாக நான் பாஜக மாவட்ட தலைவராக இருப்பதால் எங்களின் வீரவணக்கத்தை செலுத்துவதற்காக சென்றோம். அப்போது, அங்கு நடந்தது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

அமைச்சர் வரும்போழுது என்ன தகுதி அடிப்படையில் இங்கு வந்துள்ளீர்கள் என்று கேட்டார். அப்போது அதை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டோம்.

அந்த நிகழ்வுகள் முடிந்து அஞ்சலி செலுத்திக்கொண்டு இருக்கும்போது நானும் எங்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தபோது விரும்பத்தகாத நிகழ்வு வெளியே நடந்துவிட்டது.

வீட்டிற்கு சென்றபிறகும் அது மன உறுத்தலாகவே இருந்தது. அதன்பின் தெளிவு பெற்றபோது அமைச்சர் வெளிநாட்டில் படித்தவர் என்பதால் அவரது தமிழ் அந்த அளவிற்கு சொல்கிறார். எந்த தகுதி என்பது இங்குள்ள நடைமுறையில் (Protocall) வந்து பூத உடலை அரசு பெற்றுக்கொண்டு வீரரின் உடலை அவரது ஊருக்கு அனுப்புகிறோம்.

ஆகையால், நீங்கள் (பாஜக) விமான நிலையத்திற்கு வெளியே வீரருக்கு மரியாதை செலுத்தலாம். வீரரின் வீட்டிற்கு சென்று மரியாதை செலுத்தலாம் என்ற அர்த்தத்தில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

அப்போது அங்கு இருக்கக்கூடிய பாஜக தொண்டர்கள் கேட்கும்போது நானுமே உட்பட அந்த நேரம் அதை ஒரு தனிமனித தாக்குதலாக எடுத்துக்கொண்டோம்.

ஆனால் பார்க்கப்போனால் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து எனது தந்தை என மொத்த குடும்பமே திராவிட இயக்கத்தில் இருந்து வந்தவர்கள். கடந்த ஒரு ஆண்டுக்கு முன் தான் நான் பாஜகவுக்கு வந்தேன்.

பாஜகவில் எப்போழுதுமே சிறுபான்மைக்கு எதிரான போக்கு நடந்துகொண்டே உள்ளது. அந்த மன உளைச்சலுடன் தான் நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம். பத்திரிக்கையாளர்களிடம் நிறைய இடங்களில் நான் இதுபற்றி பேசியுள்ளேன்.

ஆளும்கட்சி அமைச்சர் மீது தாக்குதல் என்பது மன உளைச்சல் தான். 12 மணி இருக்கும் என நினைக்கிறேன் இதுவரை தூக்கம் வரவில்லை. யோசித்து பார்த்தேன். நான் அடிக்கடி வந்த வீடு இது. எனது தாய் வீடு. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் போன் செய்து கேட்டேன். விழித்திருந்தார் என்றால் பார்க்கவேண்டுமென கேட்டேன்.

அவர் விழித்துதான் இருந்தார். அதனால் வந்து எனது வருத்தத்தை அவரிடம் தெரிவித்தேன். மன்னித்துவிடுங்கள் அண்ணன். காலையில் இது தெரியாமல் நடந்துவிட்டது. நீங்கள் எந்த தகுதி அடிப்படையில் என்று கேட்டதும் நான் கார்கில் சமயத்தில் இதுபோன்று இருக்கும்போது நான் திமுகவில் எம்.எல்.ஏ.வாக இருந்தேன். அப்போது, எனக்கு வீரவணக்கம் செலுத்த வாய்ப்பு இருந்தது. இப்போது, நானும் சாதாரண பொது ஜனம் தான். டாக்டராக இருக்கலாம், ஒரு கட்சியில் மாவட்ட தலைவராக இருக்கலாம் ஆனால் அந்த இடத்தில் நான் இருந்திருக்கக்கூடாது.

அப்போதுமே, லெப்டினண்ட் கர்னல் எனக்கும், அண்ணாமலை சாருக்கும் அஞ்சலி செலுத்த அனுமதி கொடுத்தார்கள். அஞ்சலி செலுத்தினோம்.

பாஜக தொண்டர்கள் கட்டுப்பாடு இழந்து ஒரு இடத்தில் இப்படி நடந்துகொண்டது பெரிய வேதனையாக இருந்தது. இது குறித்து அமைச்சரிடம் விளக்கத்தை கொடுத்தேன். அமைச்சர் இதை சாதாரணமாகத்தான் எடுத்துக்கொண்டார்.

அதனால், ஆரம்பத்தில் இருந்து நாம் வளர்ந்த சுயமரியாதை என்பது இதுபோன்ற அரசியலை துவேசமான அரசியலை செய்வதற்கு நான் ஒரு ஆளாக இருந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் தான் நான் வந்துள்ளேன். இப்போது எனது மனது கொஞ்சம் அமைதியாக உள்ளது. சென்று நிம்மதியாக உறங்குவேன் என நினைக்கிறேன்.

அண்ணன் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எனக்கு அறிமுகமானவர் தானே. இந்த வீட்டில் தான் நாங்கள் வளந்துள்ளோம். பாஜக தொண்டர்கள் சார்பில் நடந்ததற்கு மன்னிப்புகேட்க வந்தேன். (பாஜகவில்) பதவி என்ன பதவி இருக்கிறது. மன அமைதி முக்கியம் அல்லவா?

பாஜகவில் நான் உறுதியாக தொடரமாட்டேன். மத அரசியல், வெறுப்பு அரசியல் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் நான் இங்கு வந்தேன். எனக்கு வெறுப்பு, மத அரசியல் ஒத்துவரவில்லை என என் மனதில் உள்ளதை அமைச்சரிடம் கொட்டிவிட்டேன்.

பாஜகவில் நான் தொடரவில்லை. பாஜகவில் நான் தொடரப்போவதுமில்லை. காலை (இன்று) ராஜினாமா கடிதத்தை எழுதிவிடுவேன். சுயமரியாதையாக இருக்கவேண்டும்.

திமுகவில் இணைவது குறித்து இதுவரை முடிவு எடுக்கவில்லை. இது குறித்து உங்களிடம் (செய்தியாளர்கள்) கூறாமல் செய்யமாட்டேன். (திமுகவில் இணைவது) செய்தாலும் தப்பில்லை. திமுக தாய் வீடு தானே. நான் வந்தாலும் அதில் தப்பில்லை. 10-15 ஆண்டுகளாக நான் உழைத்த கட்சி திமுக.

நான் டாக்டர் என் டாக்டர் தொழிலை பார்ப்பேன். மதுரையில் நான் ஒரு தொண்டு நிறுவனம் வைத்துள்ளேன். மக்களுக்கான தொண்டு செய்துகொண்டுள்ளேன். காலப்போக்கில் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து பார்ப்போம். பத்திரிக்கை நண்பர்களுக்கு தெரியாமல் செய்யப்போவதில்லை. திமுகவில் சேர்ந்தாலும் தப்பில்லை. திமுக தாய் வீடு தானே என்று நான் சொல்ல வருகிறேன். பாஜகவில் தொடர எனக்கு விருப்பமில்லை.

தொடர்ச்சியாக ஏற்பட்ட மன உளைச்சல் தான் பாஜகவில் இருந்து விலக காரணம். மத அரசியல் மிகக்கடுமையாக இருக்கிறது. நான் ஒரு டாக்டராக எல்லாருக்கும் பொதுவான மனிதனாக வாழ்ந்துவிட்டேன். அதனால் அந்த துவேசத்தை நம்மால் செய்யமுடியவில்லை தாங்க முடியவில்லை' என்றார்.


Next Story