எடப்பாடி பழனிசாமியோடு எனக்கு தனிப்பட்ட கருத்து வேறுபாடு கிடையாது - டிடிவி தினகரன் பேட்டி
எடப்பாடி பழனிசாமியோடு எனக்கு தனிப்பட்ட கருத்து வேறுபாடு கிடையாது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தஞ்சாவூர்,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் அவர்களின் கருத்தை நான் வரவேற்கிறேன். அனைவரும் இணக்கமாக செயல்பட்டால்தான் திமுக அரசை ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்ற முடியும் என்ற ஒரு உயரிய நோக்கத்தோடு அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் கருத்தை நான் வரவேற்கிறேன். அதே நேரத்தில் துரோகிகள், துரோக சிந்தனை உள்ளவர்கள் திருந்தினால் தான் இவர்களுடைய எண்ணங்கள் நிறைவேறும் என்பதையும் நான் சொல்லிக் கொள்ளுகிறேன்.
ஓ.பன்னீர்செல்வம் தெளிவாகவே சொல்லுகிறார், அவர்கள் எங்களிடம் வர வேண்டுமென்றோ நாங்கள் அவர்களிடம் போக வேண்டுமொன்றோ அவசியம் இல்லை. எல்லாரும் இணக்கமாக செயல்பட வேண்டும். இணைந்து என்று அவர் சொல்வது எல்லாரும் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்று கூறுகிறார்.
தமிழக மக்கள் பெரிய எதிர்பார்ப்போடு திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நம்பி அவர்களை ஆட்சிக்கு வரவைத்தார்கள். ஆனால் மக்களை ஏமாற்றுகிற விதமாகத்தான் திமுக ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கான பலனை அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் அனுபவிப்பார்கள்.
யாரோடும் எங்களுக்கு அரசியல் ரீதியான எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. பழனிசாமியோடு கூட எனக்கு தனிப்பட்ட கருத்து வேறுபாடு கிடையாது. அவருடைய குணாதிசத்தைத் தான் நான் திரும்ப திரும்ப கண்டிக்கிறேனே தவிர, தனிப்பட்ட விரோதம் யாரோடும் வைத்துக் கொள்வது கிடையாது. எந்த கட்சியோடும் கிடையாது.
நம்பிக்கைத் துரோகம் என்பது அருவருக்கத்தக்க குணாதிசயம். எந்த தவறு செய்தாலும் மன்னித்துக் கொள்ளலாம். ஆனால் செய்நன்றி மறந்தவர்களுக்கு மன்னிப்பே கிடையாது.
இவ்வாறு கூறினார்.