தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன் - ராகுல் காந்தி
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 18-ந்தேதி அனுமதிக்கப்பட்டார்.
சென்னை,
உடல் நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 18-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மார்பு சளி, இருமல் காரணமாக செயற்கை சுவாசக்கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகள் பரவிவந்த நிலையில், விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார் என்றும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் விஜயகாந்த் உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக அவருடைய மனைவி பிரேமலதா எக்ஸ் பக்கத்தில் வீடியோ பதிவில் தெரிவித்திருந்தார்.
இதனிடையே பல பிரபலங்கள் விஜயகாந்த், விரைவில் உடல்நலம் பெற வேண்டுமென பிரார்த்தனை செய்வதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, "நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து மிகுந்த கவலையடைந்தேன். அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து, அவர் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்திற்கு என்னுடைய அன்பையும் ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறேன்", என்று கூறியுள்ளார்.