''கொன்று விடுவதாக மிரட்டியதால் ரவுடியை தீர்த்துக் கட்டினேன்''கைதான தொழிலாளி வாக்குமூலம்


கொன்று விடுவதாக மிரட்டியதால் ரவுடியை தீர்த்துக் கட்டினேன்கைதான தொழிலாளி வாக்குமூலம்
x

எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் ரவுடியை கொன்றேன் என்று கைதான தொழிலாளி வாக்குமூலம் அளித்து உள்ளார்.

கன்னியாகுமரி

நாகா்கோவில்,

எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் ரவுடியை கொன்றேன் என்று கைதான தொழிலாளி வாக்குமூலம் அளித்து உள்ளார்.

வழக்குகள்

நாகர்கோவில் பட்டகசாலியன்விளை பெருமாள் நகரை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 29), டைல்ஸ் கடையில் வேலை செய்து வந்தார். இவர் மீது கோட்டார் மற்றும் நேசமணிநகர் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. கோட்டார் போலீஸ் நிலைய ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் உள்ளது.

இவருக்கும், பீச்ரோடு பெரியவிளையை சேர்ந்த தொழிலாளியான சிவசங்கர் (38) என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. மேலும் கடந்த ஆண்டு ரஞ்சித் வீட்டுக்குள் சிவசங்கர் உள்ளிட்ட 4 பேர் நுழைந்து பொருட்களை அடித்து உடைத்துள்ளனர். இதுதொடர்பாக நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் ரஞ்சித்தின் தாயார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்துக்கு பிறகு ரஞ்சித்துக்கும், சிவசங்கருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

வாக்குமூலம்

இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு ரஞ்சித்தை சிவசங்கர் கத்தியால் குத்தினார். அப்போது அதை தடுக்க வந்த ரஞ்சித்தின் நண்பா் விக்னேசுக்கும் கத்தி குத்து காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரஞ்சித் பரிதாபமாக இறந்தார். விக்னேசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் சிவசங்கரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

எனக்கும், ரஞ்சித்துக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது. என்னை எங்கு பார்த்தாலும் முறைத்து மிரட்டல் விடுப்பார். என் மீது போலீசிலும் புகார் கொடுத்தார். சம்பவத்தன்றும் என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். இதனால் ரஞ்சித் மீது எனக்கு கோபம் அதிகமானது. அதைத் தொடர்ந்து பெரியவிளைக்கு நான் சென்று அங்கு நின்று கொண்டிருந்த ரஞ்சித்திடம் ஏன் புகார் அளித்தாய்? என்று கேட்டேன். அப்போது அவர் என்னை தாக்க முயன்றார். மேலும் அவர் தொடர்ந்து தொல்லை செய்ததால் ஆத்திரத்தில் நான் கத்தியால் அவரை குத்தினேன்.

இவ்வாறு சிவசங்கர் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து சிவசங்கரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story