'நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு கிடைத்தால் போட்டியிடுவேன்' நடிகை நமீதா அதிரடி பேட்டி
அண்ணாமலை யாத்திரையில் விரைவில் இணைவேன். நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு கிடைத்தால் போட்டியிடுவேன் என்று நடிகை நமீதா அதிரடியாக அறிவித்துள்ளார்.
சென்னை,
நாட்டின் 76-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தன்று நாட்டு மக்கள் தங்கள் இல்லங்களில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில் தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
முன்னணி நடிகையாக திகழ்ந்து, தற்போது தமிழக பா.ஜ.க. பிரமுகராக உள்ள நமீதா தனது கணவர் வீரேந்திர சவுத்ரியுடன் சென்னை தியாகராயநகரில் உள்ள தபால் நிலையத்துக்கு நேற்று வந்தார். அங்கு தேசிய கொடியை வாங்கினார்.
வாய்ப்பு கிடைத்தால்...
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
15-ந்தேதி சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை என் வீட்டின் மொட்டை மாடியில் ஏற்றுவேன். நீங்களும் இதை செய்யுங்கள் என்று நாட்டு மக்களுக்கு நான் அன்பான வேண்டுகோள் விடுக்கிறேன். அண்ணாமலை யாத்திரை பயணம் சூப்பரா இருக்கிறது. நானும் இந்த யாத்திரையில் சீக்கிரம் இணைய போகிறேன்.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று பா.ஜ.க.தான் ஆட்சிக்கு வரும். பிரதமராக மோடிதான் வருவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா? என்று கேட்டதற்கு, ''வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பார்க்கலாம்.'' என்று அவர் பதிலளித்தார்.
தபால் நிலைய ஊழியர்களும், பொதுமக்களும் நமீதாவுடன் ஆர்வமாக 'செல்பி' எடுத்துக் கொண்டனர். 'தேசிய கொடியுடன் 'பாரத் மாதா கீ ஜெ...' என்று நடிகை நமீதா கோஷம் எழுப்பிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.