சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் -அண்ணாமலை ஆவேசம்
சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க ஒருபிடி மண்ணைக்கூட எடுக்கவிட மாட்டேன் என்றும், சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்றும் அன்னூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை ஆவேசமாக கூறினார்.
கோவை,
கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. இதற்காக 3731 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகள் சங்கம் சார்பில் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பா.ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை அன்னூரில் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசும்போது கூறியதாவது:-
முதல்-அமைச்சர் யோசிக்க வேண்டும்
தமிழகத்தில் கோவையை காட்டிலும் மற்ற மாவட்டங்களில் தரிசு நிலங்கள் அதிகமாக உள்ளது. அந்த இடங்களில் தொழிற்சாலை அமைக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு தி.மு.க.அரசு இங்குள்ள விவசாயத்தை நசுக்குவதற்காக பித்தலாட்டம் செய்கிறது.
விவசாயத்தை நசுக்கி தொழிற்பேட்டை அமைப்பதில் என்ன லாபம், மக்களின் பிரச்சினையை எப்படி சரிசெய்ய வேண்டும் என்பதை முதல்-அமைச்சர் யோசிக்க வேண்டும்.
பிரதமர் கேட்டார்
இந்தியாவில் மற்ற மாநிலங்களில் உள்ள தமிழ் அமைப்பினர் பாரத பிரதமர் மோடிக்கு ஆதரவாக உள்ளனர். இதற்கு காரணம் தமிழையும், தமிழர்களையும் நேசிக்கும் ஒரு தலைவராக பிரதமர் மோடி விளங்கி வருகிறார்.
நான் கடந்த வாரம் டெல்லி சென்றபோது அங்கு பிரதமர் என்னை நேரில் சந்தித்து தமிழகத்தில் இருந்து காசி சங்கமத்திற்கு எத்தனை பேர் வந்தார்கள்? கடும் குளிர்காலமாக இருக்குமே, அவர்கள் எப்படி பாதுகாப்பாக இருந்தார்கள்? அவர்களுக்கு உணவெல்லாம் சரியாக கிடைத்ததா? என்று பல்வேறு கேள்விகளை கேட்டார். அதை கண்டு நான் உண்மையில் வியந்து போனேன்.
சாகும்வரை உண்ணாவிரதம்
தற்போது மத்திய அரசுக்கு போட்டியாக காசி யாத்திரையை தொடங்குவதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். 60 வயதுக்கு மேற்பட்டவர்களை தற்போது அனுப்புவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். தற்போது அங்கு சென்றால் கடும் குளிர் இருப்பதால், அவர்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாவார்கள்.
இப்போது நான் உங்கள் முன் ஒரு சவால் வைக்கிறேன். அன்னூரில் விவசாய நிலத்தில் ஒருபிடி மண்ணை மாநில அரசு எடுக்குமானால் நான் இங்கு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன். ஒருபிடி மண்ணைக் கூட இங்கிருந்து எடுக்க விடமாட்டேன்.
இவ்வாறு அவர் பேசினார்.