மாவட்ட வாரியாக சென்று தொண்டர்களை சந்திப்பேன் -ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
அனைத்து நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட்ட பிறகு மாவட்ட வாரியாக சென்று தொண்டர்களை சந்திப்பேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது சென்னை வீட்டில், மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், மகளிர் அணியினர், இளைஞர் அணியினர், சிறுபான்மை பிரிவினர் உள்ளிட்ட பலர் நேற்று சந்தித்து பேசினர். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
மெகா கூட்டணி அமைக்கப்போவதாக நாமக்கல்லில் நடந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். யாரெல்லாம் அந்த கூட்டணியில் இணையப்போகிறார்கள்? என்பதை அவர்தான் சொல்ல வேண்டும். டி.டி.வி.தினகரன் அதில் இணைவாரா? என்ற ஹேஸ்யத்திற்கு என்னால் பதில் சொல்ல முடியாது.
அ.தி.மு.க.வை தொண்டர்களுக்கான இயக்கமாகத்தான் எம்.ஜி.ஆர். உருவாக்கினார். அது பல ஆண்டு காலமாக வளர்ந்து இயங்கி வருகிறது. எனவே அனைத்து தொண்டர்களும் இணைய வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை.
மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நான் மேற்கொண்ட தர்மயுத்தம் பற்றி கருத்து கூறியுள்ளார். நல்ல விஷயங்கள் எதுவும் அவர் வாயில் இருந்து என்றைக்கும் வராது. அ.தி.மு.க. மாவட்ட கழக செயலாளர்கள் பட்டியல் இறுதி கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. மாவட்ட கழக செயலாளர்கள் அனைத்து நிர்வாகிகளின் பட்டியலை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். முறைப்படி அதை அறிவித்துக்கொண்டிருக்கிறோம். இந்த பணிகள் எல்லாம் முடிந்த பிறகு மாவட்ட வாரியாக தொண்டர்களை சந்திக்கும் சுற்றுப்பயணம் உறுதியாக நடைபெறும்.
தி.மு.க.வை எதிர்ப்பதற்காகத்தான் அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். உருவாக்கினார். அதுதான் எங்களின் வழி. தி.மு.க.வின் செயல்பாடுகள் பற்றி கடுமையாக விமர்சனம் செய்து அறிக்கையாக வெளியிட்டுக்கொண்டிருக்கிறேன். தி.மு.க.வை எதிர்க்கும் உண்மையான எதிர்க்கட்சியாக நாங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். இதில் உள்குத்து எதுவும் இல்லை.
கவர்னர் செயல்பாடு
இந்திய அரசியல் சாசனத்தின்படி கவர்னர் பற்றி பல்வேறு கருத்து வேறுபாடுகளை வெளிக்கொண்டு வருவது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். இந்திய அரசியல் சாசனத்தின்படி கவர்னர் அவருக்கு உரிய கடமைகளைச் செய்து கொண்டிருக்கிறார். மாநில அரசை கவர்னர் செயல்படவிடவில்லை என்ற குற்றச்சாட்டு நிரூபணமாகவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.