எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் கட்சியை வழிநடத்துவேன் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் கட்சியை வழிநடத்துவேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை,
எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இன்று காலை 11.30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் பிறப்பித்தார்.
அதில், அ.தி.மு.க வின் ஜூன் 23 ந்தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். தனி கூட்டம் கூட்டக் கூடாது. பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார் கோர்ட்டின் தீர்ப்பை அடுத்து ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்த நிலையில் சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஆதரவாளர்கள் புடைசூழ ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
அதிமுக பொதுக்குழு வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைச் சென்னை ஐகோர்ட்டு வழங்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட அசாதாரணமான சூழலில், நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. தொண்டர்களின் இயக்கத்தை பிளவுபடுத்த யார் நினைத்தாலும் அது நடக்காது. இந்த வெற்றி அதிமுகவுக்குக் கிடைத்த முழுமையான வெற்றி.
தொண்டர்களின் இயக்கமாக, யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக அதிமுகவை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கினார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் கட்சியை வழிநடத்துவேன்.
எம்ஜிஆர், ஜெயலலிதா செய்த தியாகங்களை மனதில் வைத்து செயல்படுவோம். அதிமுக ஒரே தரப்பு தான், இருதரப்பு என்பதே கிடையாது. அதிமுகவின் கொள்கைக்கு இசைந்து வருபவர்கள் இணைத்து கொள்ளப்படுவார்கள்.
மேலும், அனைவரும் ஒன்றுபட வேண்டும், கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும். அனைவரையும் அரவணைத்துச் செல்வது தான் தலைமைக்கு இருக்க வேண்டிய பண்பு.
எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் தொண்டர்களின் விருப்பப்படியே இருக்கும். தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு விமர்சனங்களை தாங்கி கொள்ளும் பக்குவம் இருக்க வேண்டும். சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு மதிப்பளித்து நாங்கள் நடப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.