"டிடிவி தினகரனுடன் கூட்டணிக்கு தயார்" - ஓபிஎஸ் அறிவிப்பு
அ.தி.மு.க.வை யாராலும் மிரட்ட முடியாது. அ.தி.மு.க. தொண்டர்களை யாராலும் பிளவுபடுத்தி பார்க்க முடியாது என்று ஓ பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
திருச்சி,
அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அரசு கொறடா துரை.கோவிந்தராஜன் தஞ்சையில் காலமானார். அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க.வை பொறுத்தவரை எம்.ஜி.ஆர். தொண்டர்களுகாக இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். இதை நான் ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன். தொண்டர்களின் நலனுக்கான இந்த இயக்கத்தின் 50 ஆண்டு பரிணாம வளர்ச்சிதான் இப்போது இருக்கிறது. தொண்டர்களை எந்த நேரத்திலும் பிளவுப்படுத்தி பார்க்க முடியாத வகையில் தான் நிலைத்து நிற்கிறது. அ.தி.மு.க.வில் எந்தவித சிறுசேதமும் இல்லை, சிறு சிறு பிரச்சினைகள் இடையில் வரும் அது சரியாக போய்விடும். அனைத்து தொண்டர்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.
அ.தி.மு.க. தலைமையில் தான் பிரச்சனை என்கிற மாயத்தோற்றம் உருவாகி உள்ளது. அது போக போக சரியாகி விடும். தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம். அ.தி.மு.க. உடன் கூட்டணி வைக்க தயார் என்கிற டி.டி.வி.தினகரனின் கருத்து நல்ல கருத்து இதை வரவேற்கிறோம். வாய்ப்பு ஏற்பட்டால் அவரை சந்திப்பேன். தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் அண்ணன் தம்பி இயக்கம் தான் ஆனால் மாறுபட்ட பாதையில் பயணித்து கொண்டு இருக்கிறோம்.
எங்கள் பாதை எம்.ஜி.ஆர். காட்டி தந்த பாதை அதில் பயணிக்கிறோம். அ.தி.மு.க. இடத்தை பா.ஜ.க. பிடிக்க பார்க்கிறது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அ.தி.மு.க.வின் ஒற்றுமையை பா.ஜ.க. குலைக்கவில்லை. அ.தி.மு.க.வை யாராலும் மிரட்ட முடியாது. அ.தி.மு.க. தொண்டர்களை யாராலும் பிளவுபடுத்தி பார்க்க முடியாது, அது நடக்காது. பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம். எங்களை பொறுத்தவரை ஜனநாயக ரீதியில் இயக்கம் செயல்பட வேண்டும், வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். அதைதான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எந்த நோக்கத்திற்காக அ.தி.மு.க. சட்ட விதியை எம்.ஜி.ஆர் உருவாக்கினாரோ அதில் சின்ன மாசோ, பங்கமோ ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் இந்த தர்ம யுத்தத்தை நடத்திக்கொண்டு இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.