'எடப்பாடி பழனிசாமியிடம் ஒரு போதும் அடைக்கலம் ஆகமாட்டேன்' பொதுக்குழு கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேச்சு


எடப்பாடி பழனிசாமியிடம் ஒரு போதும் அடைக்கலம் ஆகமாட்டேன் பொதுக்குழு கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேச்சு
x

சென்னையில் நடந்த அ.ம.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சி பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். கூட்டத்தில் அவர், “எடப்பாடி பழனிசாமியிடம் ஒருபோதும் அடைக்கலம் ஆகமாட்டேன்” என்று பேசினார்.

சென்னை,

அ.ம.மு.க. பொதுக்குழு கூட்டம், சென்னை வானகரத்தில் நேற்று நடந்தது. கட்சியின் துணை பொதுச்செயலாளர் சண்முகவேலு தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர்கள் ஜி.செந்தமிழன், ரங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 2,300-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், 1,500-க்கும் மேற்பட்ட சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் வெள்ளி செங்கோல், வீரவாள் உள்ளிட்டவற்றை பரிசளித்தனர். அதேபோல அ.ம.மு.க.வில் காலியாக இருந்த தலைவர் பதவிக்கு சி.கோபால் தேர்வு செய்யப்பட்டார். மேலும் கட்சியின் துணைத்தலைவராக முன்னாள் எம்.பி. எஸ்.அன்பழகன் தேர்வானார்.

தேர்தல் பின்னடைவுகள் பாதிக்காது

பொதுக்குழு கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-

அ.ம.மு.க. உருவாக்கப்பட்டு 6 ஆண்டுகள் கடந்து விட்டன. தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ தனித்து தேர்தலை சந்திக்க முடியுமா? ஆனால் தனித்து நிற்கக் கூடிய தைரியம் அ.ம.மு.க.வுக்கு உள்ளது. இதனாலேயே தேர்தல் பின்னடைவுகள் நம்மை பாதிக்கவில்லை. முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இல்லை. கடந்த தேர்தலில் கூட பா.ம.க. இல்லாவிட்டால் வெற்றி பெற்றிருக்க முடியாது.

தமிழகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தையும், என்னையும் ஒழித்துவிட வேண்டும் என்பது தான் அவரது நோக்கம். கோடநாடு கொலை-கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி தமிழகம் முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பெயரை நாங்கள் பயன்படுத்தவே இல்லை. ஆனாலும் அ.தி.மு.க.வினர் எங்கள் மீது கோபம் கொண்டது ஏன்?

அடைக்கலம் ஆகமாட்டேன்

இப்போதும் சொல்கிறேன். எடப்பாடி பழனிசாமியிடம் ஒருபோதும் அடைக்கலம் ஆகமாட்டேன். அவரது துரோகத்தை மன்னிக்கவும் மாட்டேன். உங்களை வீழ்த்தாமல் ஓயப்போவதில்லை. வழக்குகள் மீதான அச்சத்தில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளனர். தி.மு.க.வுடன் பேரம் பேசி வருகின்றனர். தென்மாவட்டத்தில் செல்வாக்கு இருக்கிறது என்பதை காட்டிக் கொள்ள மாநாடு நடத்துகின்றனர். ஆனால் நாம், அ.ம.மு.க.வின் கிளை இல்லாத ஊரே இல்லை என்னும் நிலையை எட்டியுள்ளோம். மக்களிடமும் நன்மதிப்பு உள்ளது. பணம் தான் இல்லை. நம்மை 2026-ம் ஆண்டு நிச்சயம் மக்கள் ஆட்சியில் அமர்த்துவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

தீர்மானங்கள் நிறைவேற்றம்

அ.ம.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து தொடர் பிரசாரங்கள் நடத்துவது, காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை மேம்போக்காக கையாளுவது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, மக்கள் மீதான வரி உயர்வு உள்ளிட்டவைகளுக்காக தி.மு.க. அரசுக்கு கண்டனம், பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்கவேண்டும், பரந்தூர் விமான நிலைய திட்டம் மற்றும் என்.எல்.சி. சுரங்க விரிவாக்க திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story