சுயமரியாதையை இழந்து யாருக்கும் ஜால்ரா அடிக்க மாட்டேன்-அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரபரப்பு பேச்சு
சுயமரியாதையை இழந்து நான் யாருக்கும் ஜால்ரா அடிக்க மாட்டேன் என்றும், நான் தனிப்பாதையில் சென்று கொண்டு இருக்கிறேன் எனவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரபரப்பாக பேசினார்.
சுயமரியாதையை இழந்து நான் யாருக்கும் ஜால்ரா அடிக்க மாட்டேன் என்றும், நான் தனிப்பாதையில் சென்று கொண்டு இருக்கிறேன் எனவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரபரப்பாக பேசினார்.
பிரியாணி விருந்து
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. தலைவராக 2-வது முறையாக பொறுப்பேற்று இருக்கிறார். அதனை கொண்டாடும் வகையில் மதுரை மடீட்சியா அரங்கில் பிரியாணி விருந்து நேற்று நடந்தது. அதில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. தலைவராக ஸ்டாலின் 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகிழ்ச்சிகரமான நிகழ்வுக்காக இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தனியாக சிலருக்கு மட்டும் ஏற்பாடு செய்தால் பொருத்தமாக இருக்காது என்பதால் அனைவரையும் அழைத்து இந்த விருந்து வைத்து உள்ளேன்.
இந்த விருந்துக்கு முதல்-அமைச்சரிடம் சம்மதம் பெற்று இருக்கிறேன். கடந்த சில நாட்களாக மதுரையில் கிடைக்கும் தகவல்கள் எனக்கு வருத்தத்தை தருகிறது. சிலர் இந்த விருந்தை தாங்களும் புறக்கணித்து விட்டு, மற்றவர்களையும் கலந்து கொள்ளக்கூடாது என்று மிரட்டுகிறார்கள். பிறப்பினால், வாய்ப்பினால், கல்வியினால், அனுபவத்தினால், உழைப்பினால், திறமையினால் நான் உலக அளவில் பல முக்கியமான பொறுப்புகளில் அனுபவம் பெற்றவன். அதனால், யாருக்கும் நான் சும்மா ஜால்ரா அடிக்க மாட்டேன்.
என்றைக்குமே கல்வி, ஆய்வு, படிப்பு, அனுபவம் அடிப்படையில் சுய மரியாதையை நான் இழக்கவே மாட்டேன். இது தான் எங்களுக்கும், அடுத்தவர்களுக்கும் உள்ள வித்தியாசம். என் வாழ்க்கையில் எத்தனையோ பேர், செய் நன்றி மறந்தவர்களாக இருக்கிறார்கள். என்னால் பயன்பட்டவர்கள், செய்நன்றி மறந்தவர்கள் மதுரையில் நிறைய பேர் இருக்கிறார்கள். என்றாவது ஒரு நாள் அவர்களுக்கு வீழ்ச்சி ஏற்படும். அது இயற்கையே கொடுத்துவிடும். ஆனால், நான் என்றைக்கும் செய் நன்றி மறக்க மாட்டேன். செய்நன்றி மறக்காமல் இருப்பதே மனிதர்களுக்கு உள்ள நல்ல குணம்.
அமைச்சர் பொறுப்பு
பெரிய மனிதர்களாக இருக்க வேண்டியவர்களுக்கு மனிதநேயம், நட்பு, பெருந்தன்மை இருக்க வேண்டும். எல்லோரும் அப்படி இருக்க முடியாது. அரசியல், பொதுவாழ்வை விட்டு நான் போகும் வரை, என்றைக்கும் அவரை போய் பார்க்காதே, அந்த நிகழ்ச்சிக்கு போகாதே, அவர் பெயரை போடாதே என்று சொல்ல மாட்டேன். அதேபோல் நான் விமான நிலையத்திற்கு வந்தால் என்னை வரவேற்க வாருங்கள், எனக்காக போஸ்டர் ஓட்டுங்கள், என் படத்தை போடுங்கள் என்று சொல்லமாட்டேன். ஏனென்றால் நான் பெரிய மனிதன். எனக்கு இது எல்லாம் தேவையில்லை.
எனது தந்தை பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் மறைந்தபோது, தலைவர் கருணாநிதி என்னிடம் வந்து, என்னுடன் நீ இருக்க வேண்டும், என்றார். ஆனால் அவரது அழைப்பை ஏற்க முடியவில்லை. அன்றைக்கு நான் அவருடன் இருந்திருந்தால் அப்போதே அமைச்சர் வாய்ப்பு வந்திருக்கும். ஆனால் அந்த வாய்ப்பை வேண்டாம் என்றேன். எத்தனை பேர் அமைச்சர் பொறுப்பை வேண்டாம் என்று கூறுவார்கள்?.
கைநீட்ட தேவையில்லை
நான் யாருடனும் போட்டியிடும் ஆள் இல்லை. நான் தனிப்பாதையில் சென்று கொண்டு இருக்கிறேன். இது எனக்கு போதும். இதற்கு மேல் நான் கீழ் இடத்திற்கு இறங்க முடியாது. நான் பெரிய மனிதராக இருக்க ஆசைப்படுகிறேன். நான் பொருளாதாரம் வைத்துள்ளேன். அடுத்தவரிடம் கைநீட்ட தேவையில்லை. சிலருக்கு நிறைய பொருள் இருந்தாலும் இன்னும் பேராசை உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மேயர் இந்திராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி உள்பட மூத்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை. அதே போல் பிரியாணி சாப்பிடுவதற்கு முண்டியடித்து கூட்டம் கூடியதால், அங்கிருந்த கண்ணாடி கதவு உடைந்து சிலருக்கு காயம் ஏற்பட்டது.