ஆறுகளில் ஆகாய தாமரையை அகற்றாவிட்டால் பதவி விலகுவேன்
வேதாரண்யம் பகுதியில் ஆறுகளில் ஆகாய தாமரையை அகற்றாவிட்டால் பதவி விலகுவேன் என மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் ஆவேசமாக கூறினார்.
வேதாரண்யம் பகுதியில் ஆறுகளில் ஆகாய தாமரையை அகற்றாவிட்டால் பதவி விலகுவேன் என மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் ஆவேசமாக கூறினார்.
மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்
நாகையில் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் ராம்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-
ஆனந்தன் (தி.மு.க):-மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பற்றாக்குறையாக உள்ளது. இரவு நேரத்தில் அவசர சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு வரும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அதிகாரிகள் வருவது கிடையாது
சரபோஜி (இ.கம்யூ):-நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை பிரிக்கப்பட்டு 2 மாவட்டங்களாக செயல்பட்டு வருகிறது. நாகையில் தான் மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டம் நடக்கப்படுகிறது. இப்படி நாகையில் நடக்கும் இந்த கூட்டத்திற்கு மயிலாடுதுறை சேர்ந்த அதிகாரிகள் வருவது கிடையாது.இதனால் கூட்டத்தில் கலந்து கொள்ளும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த கவுன்சிலர்கள், பொதுமக்கள் குறைகளை எப்படி அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியும். இதனால் மக்கள் பிரதிநிதிகளின் பணிகள் தொய்வு ஏற்படுகிறது.
எனவே வரும் கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும்.
ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும்
சுப்பையன் (அ.தி.மு.க.);-வேதாரண்யம் முள்ளியாறு, மானங்கொண்டானாறு, வடிகால் வாய்க்கால்களில் ஆகாய தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளது. இதனால் வயல்களுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலையும், மழை காலங்களில் தண்ணீர் வடியமுடியாத நிலையும் உள்ளது.
ஆடு, மாடு கூட தண்ணீர் குடிக்க முடியாத நிலையில் உள்ளது.
ஆகாயத்தாமரைகளை அப்புறப்படுத்த பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் எனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்யக்கூட தயாராக உள்ளேன் என்று ஆவேசமாக கூறினார்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
முடிவில் துணைத்தலைவர் அஜிதா நன்றி கூறினார்.