திண்டுக்கல் மாவட்டத்தில் 42 ஆயிரம் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை


திண்டுக்கல் மாவட்டத்தில் 42 ஆயிரம் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை
x
தினத்தந்தி 27 Feb 2023 2:00 AM IST (Updated: 27 Feb 2023 2:01 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 42 ஆயிரம் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நத்தம், நிலக்கோட்டை, வேடசந்தூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளுக்கும் கடந்த நவம்பர் மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 18 லட்சத்து 67 ஆயிரத்து 833 வாக்காளர்கள் இருந்தனர். இதைத் தொடர்ந்து வாக்காளர் சேர்க்கை, நீக்கம், திருத்தம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன. இதற்கான விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. மேலும் கடந்த மாதம் 5-ந்தேதி வாக்காளர் பட்டியல் வெளியானது. அதில் 9 லட்சத்து 16 ஆயிரத்து 285 ஆண்கள், 9 லட்சத்து 68 ஆயிரத்து 393 பெண்கள், 214 திருநங்கைகள் என மொத்தம் 18 லட்சத்து 84 ஆயிரத்து 892 வாக்காளர்கள் இடம்பெற்று உள்ளனர். இதன்மூலம் 17 ஆயிரத்து 59 வாக்காளர்கள் அதிகரித்தனர்.

இந்த புதிய வாக்காளர்களுக்கு ஐதராபாத்தில் அடையாள அட்டை அச்சிடும் பணி நடக்கிறது. அதேநேரம் ஏற்கனவே 25 ஆயிரம் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை. அவர்களுக்கும் அடையாள அட்டை தயாராகி வருகிறது. இதன்மூலம் மொத்தம் 42 ஆயிரம் புதிய வாக்காளர்களுக்கு ஒருசில வாரங்களில் அடையாள அட்டை வழங்கப்பட இருக்கிறது. இந்த வாக்காளர் அடையாள அட்டை சம்பந்தப்பட்ட வாக்காளரின் வீட்டுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story