பயன்பாடின்றி கிடக்கும் பள்ளி கட்டிடங்களை அகற்ற வேண்டும்


பயன்பாடின்றி கிடக்கும் பள்ளி கட்டிடங்களை அகற்ற வேண்டும்
x

காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் பயன்பாடின்றி கிடக்கும் பள்ளி கட்டிடங்களை அகற்ற ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் அறிவுறுத்தினார்.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் பயன்பாடின்றி கிடக்கும் பள்ளி கட்டிடங்களை அகற்ற ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் அறிவுறுத்தினார்.

அகற்ற வேண்டும்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓச்சேரி ஊராட்சியில் ஜல் ஜீவன் மிசன் குறித்து ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் ஆனந்தராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது இந்த திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதா? என அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம், துணை சுகாதார நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.

அப்போது பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் குடிநீர் தரம் குறித்து, பள்ளி ஆசிரியர்கள், மற்றும் அரசு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மாணவர்கள் பயன்படுத்தும், கழிவறைகளை நன்கு பராமரிக்கவும், பயன்பாடின்றி சிதிலமடைந்து காணப்படுகின்ற, கட்டிடங்களை அகற்றவும் அறிவுறுத்தினார்.

அறிக்கை அனுப்ப வேண்டும்

மேலும் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் அமைய உள்ள இடத்தையும் ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், அதிகாரிகள் நேரில் சென்று, குடிநீர், மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறை, ஆகியவற்றை ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இதேபோல் அனைத்து அரசு அலுவலக கட்டிடங்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். திட்ட இயக்குநர் லோகநாயகி, செயற்பொறியாளர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பரசு, பாலாஜி, ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா ஜெயகாந்தன், பொறியாளர் ஏகநாதன், ஊராட்சி செயலாளர்கள் லலிதா, அருண்பாண்டியன், உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story