பா.ஜனதாவை மீண்டும் ஆள அனுமதித்தால் நாட்டுக்கே கேடாக முடியும்: முதல்-அமைச்சர் பரபரப்பு பேச்சு


பா.ஜனதாவை மீண்டும் ஆள அனுமதித்தால் நாட்டுக்கே கேடாக முடியும்: முதல்-அமைச்சர் பரபரப்பு பேச்சு
x

பா.ஜனதாவை மீண்டும் ஆள அனுமதித்தால் நாட்டுக்கே கேடாக முடியும் என்று கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். மதசார்பற்ற சக்திகள் ஒருங்கிணைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

திருவாரூர்,

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் 7 ஆயிரம் சதுரடி பரப்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. அங்கு கருணாநிதியின் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

ரிப்பன் வெட்டி திறப்பு

இந்த நிலையில், கலைஞர் கோட்டத்தின் திறப்பு விழாவும், கருணாநிதி சிலை திறப்பு விழாவும் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவுக்கு தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினர்களாக பீகார் மாநில துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், அம்மாநில நீர்வளத்துறை மந்திரி சஞ்சய் குமார் ஜா ஆகியோர் கலந்துகொண்டனர். கலைஞர் கோட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது சகோதரி செல்வி ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். தொடர்ந்து, கருணாநிதியின் சிலையையும் அவர்கள் திறந்து வைத்தனர்.

அதன் பின்னர், கலைஞர் அருங்காட்சியகத்தில் உள்ள புகைப்படங்களை அனைவரும் பார்வையிட்டனர். அங்குள்ள 'செல்பி பாயிண்ட்' இருக்கையில் அமர்ந்து, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் தேஜஸ்வி யாதவ் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அதன்பின்னர், அங்குள்ள முத்துவேலர் நூலகத்தை அவர் திறந்துவைத்து பார்வையிட்டார்.

4 ஜோடிகளுக்கு திருமணம்

தொடர்ந்து, 4 ஜோடிகளுக்கு திருமணத்தை மாலை எடுத்துக்கொடுத்து மு.க.ஸ்டாலின்-துர்கா ஸ்டாலின் தம்பதியினர் நடத்தி வைத்தனர். தேஜஸ்வி யாதவ் தாலி எடுத்துக்கொடுத்தார். அதன்பின்னர், விழா தொடங்கியது. தயாளு அம்மாள் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் அனைவரையும் வரவேற்றார்.

தொடர்ந்து, விழா மேடையில் இருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதன்பின்னர், கலைஞர் கோட்டம் உருவாக காரணமாக இருந்த முதல்-அமைச்சரின் சகோதரி செல்வி உள்ளிட்டோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. தர்மபுரம் ஆதினத்துக்கும் நினைவு பரிசை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அதன்பின்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. வெள்ளியில் செய்யப்பட்ட திருவாரூர் தேர் வடிவத்தை நினைவு பரிசாக வழங்கினார்.

தொடர்ந்து, விழாவுக்கு தலைமை தாங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தலைவராகவே பிறந்தவர் கருணாநிதி

வான்புகழ் வள்ளுவருக்கு தலைநகரில் கோட்டம் கண்ட கருணாநிதிக்கு, திருவாரூரில் கோட்டம் கட்டி எழுப்பப்பட்டு இருக்கிறது. ஓடி வந்த இந்தி பெண்ணே கேள், நீ தேடி வந்த கோழை நாடு இதுவல்லவே... என்று 13 வயதில் எந்த திருவாரூர் வீதிகளில் கருணாநிதி போர் பரணி பாடி வந்தாரோ, அதே திருவாரூர் வீதியில் அவருக்கு கோட்டம் எழுப்பப்பட்டுள்ளது. அண்ணாவை, கருணாநிதி முதல் முதலில் சந்தித்தது திருவாரூர் தான். தலைவராக பிற்காலத்தில் ஆனவர் அல்ல கருணாநிதி. தலைவராகவே பிறந்தவர் தான் கருணாநிதி. அதற்கு அடித்தளமிட்டது இந்த திருவாரூர்.

மன்னர்கள் கூட தாங்கள் ஆளும்போது தான் கோட்டமும், கோட்டையும் கட்டுவார்கள். ஆனால் கருணாநிதி மறைவுக்கு பிறகு இந்த கோட்டம் கட்டப்பட்டிருக்கிறது. கருணாநிதி இன்னமும் வாழ்கிறார், ஆள்கிறார் என்பதின் அடையாளமாகத்தான் இந்த கோட்டம் கம்பீரத்துடன் அமைந்திருக்கிறது. எனது தாயார் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் இந்த கோட்டம் திறக்கப்பட்டுள்ளது.

தாய் எழுப்பிய அன்பு கோட்டை

என்னை பொறுத்தவரை என் தந்தைக்கு, என் தாய் எழுப்பிய அன்பு கோட்டையாகவே இதை கருதுகிறேன். டி.கே.சீனிவாசன், கவிஞர் கா.மூ.ஷெரிப் ஆகியோர் வாழ்த்தி பேசிட புரட்சி தோட்டமான கருணாநிதியை, எனது தாயார் திருமணம் செய்துகொண்டதும் இதே திருவாரூர் தான். கருணாநிதி வாழ்வில் எத்தனையோ மேடு பள்ளங்களை, வெற்றி-தோல்விகளை, ஏற்ற-இறக்கங்கள் என எத்தனையோ ஏற்பட்டிருந்தாலும், அதை சிரித்து எதிர்கொண்ட, கருணை உள்ளம் கொண்டவர் என் தாயார் தயாளு அம்மாள்.

கலைஞர் கோட்டம் என்பது கருணாநிதியின் பன்முக பரிணாமங்களை சொல்லக்கூடிய கருவூலம். அவரின் சிலை, முத்துவேலர் நூலகம், 2 அரங்குகள், 2 தியேட்டர்கள், பாளையங்கோட்டை சிறையில் இருப்பது போன்ற வடிவமைப்பு, செல்பி பாயிண்ட், கருணாநிதியுடன் படம் எடுக்கும் வசதி என இந்த கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தேர் இங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. திராவிட கட்டிட கலையுடன், நவீன வசதிகளும் சேர்த்து அமைக்கப்பட்டுள்ளது.

4 ஆண்டுகள்

2018-ம் ஆண்டு கருணாநிதி மறைந்தபோது நானும், சகோதரி செல்வியும் இந்த நிலத்தை விலைக்கு வாங்கினோம். அதற்கு பிறகு இங்கு ஓர் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் உருவாக்க முடிவு செய்து, 4 ஆண்டுகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு இதனை சிறப்பாக இப்போது கட்டி முடித்துள்ளார். இதற்காக பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எனது வாழ்த்துகள்.

பார்த்து பார்த்து செதுக்கியது போல, கண்ணும் கருத்துமாக இந்த கோட்டத்தை அவர் மேற்பார்வையிட்டு வந்தார். இந்த கோட்டத்தை சிறப்பாக உருவாக்கி தந்த தயாளு அம்மாள் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் மோகன் காமேஷ்வரன், அறங்காவலர் சம்பத்குமாருக்கும் பாராட்டுகள்.

கருணாநிதி பயணம்

கருணாநிதி தமிழின தலைவராக போற்றப்பட்டார். சென்னை முதல் குமரி வரை அனைத்து ஊர்களுக்கும் உதவிகள் செய்தார், நலத்திட்டங்களை கொண்டுவந்தார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என வாழ்ந்த புறநானூற்று புலவர் அவர். அவரிடம் பிடித்த ஊர் கேட்டால், தான் பிறந்த திருக்குவளையை தான் சொல்வார். அந்தளவு திருக்குவளையை அவர் காதலித்தார். தான் வாழ்ந்த இல்லத்தில் தாயார் அஞ்சுகம் பெயரில் படிப்பகமும், தந்தை முத்துவேலர் பெயரில் நூலகமும் அமைத்தார். பள்ளி மேற்படிப்பு படிக்க திருவாரூர் வந்தார், கருணாநிதி.

அதன்பிறகு திருவாரூரே, அவர் கருவாக, திருவாக, காராணமான ஊராகியது. அவரை நாடு போற்றும் தலைவராக்கிய ஊர் இது. குளித்தலை, தஞ்சை, சைதாப்பேட்டை, அண்ணாநகர், துறைமுகம், சேப்பாக்கம் என எத்தனையோ தொகுதிகளில் அவர் போட்டியிட்டாலும், இறுதியாய் வந்து நின்ற இடம் திருவாரூர். 2 முறை இங்கு அவர் வென்றுள்ளார். தேர் புறப்பட்ட இடத்துக்கே வந்து நிலைகொள்ளும் என்பது போல கருணாநிதி பயணமும் இருந்தது. அதனாலேயே இந்த கோட்டம் இங்கு கம்பீரமாக எழுப்பப்பட்டுள்ளது.

நிதிஷ்குமாருக்கு உடல்நல குறைவு

கருணாநிதி கோட்டத்தை திறந்து வைப்பதற்காக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் வருவதாக இருந்தது. அவருக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்ட காரணத்தால் வர இயலவில்லை. எனவே இன்று காலை அவர் என்னை தொலைபேசியில் அழைத்து பேசினார். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சிக்கு வர முடியாதது குறித்து வருத்தம் தெரிவித்தார். அவர் இங்கே பேசுவதாக இருந்த சிறப்புரையை திருச்சி சிவா வாசித்து இருக்கிறார். அந்த உரை சிறப்பாக இருந்தது.

இந்தியாவில் ஜனநாயகத்தை காக்க கூடிய பொறுப்பை ஏற்று, அதற்கு அடித்தளம் அமைக்கும் பணியை பீகார் தொடங்கி இருக்கிறது. வருகிற 23-ந் தேதி அன்று பீகார் மாநிலம் பாட்னாவில் மதசார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடக்க இருக்கிறது. பாட்னா என்பது இந்தியாவில் உள்ள தொன்மையான நகரங்களில் ஒன்றாகும். பாடலிபுத்திரம் இது வரலாற்றில் இன்றைக்கும் அழைக்கப்பட கூடிய ஒரு இடமாக இருக்கிறது. அது தான் இன்றைய பாட்னா. அறிவு, ஞானத்தின் அடையாளமாக சொல்லப்பட்ட நகரம். ஜனநாயகம் என்பது வீட்டுக்கு விளக்கு. சர்வாதிகாரம் காட்டு தீ என்று சொன்னவர், கருணாநிதி.

சர்வாதிகார காட்டுத்தீ

பா.ஜ.க. கடந்த 10 ஆண்டு காலமாக பரப்பி வரும் சர்வாதிகார காட்டு தீயை அணைக்க வேண்டிய கடமை நமக்கெல்லாம் இருக்கிறது. அதற்கான முதல் ஜனநாயக விளக்கை பாட்னாவில் ஏற்றுவதற்கான ஏற்பாட்டை பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தொடங்கிவைக்க இருக்கிறார். நானும் பாட்னா செல்கிறேன். உங்கள் அன்போடு செல்கிறேன். உங்கள் நம்பிக்கையோடு செல்கிறேன்.

ஜனநாயக போர்களத்தில் கருணாநிதியின் தளபதியாக நானும் பங்கேற்க இருக்கிறேன். இந்திய ஜனநாயகத்தை காக்க வேண்டிய நெருக்கடியான நேரத்தில் இன்றைக்கு நாம் இருக்கிறோம். இதை செய்யாவிட்டால் 4 ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த தமிழ்நாடு என்ற மாநிலமே இல்லாமல் போய் விடும்.

ஒற்றுமை வேண்டும்

கருணாநிதியின் உடன்பிறப்புகள் இதை செய்யாவிட்டால் வேறு யாராலும் செய்ய முடியாது. மீண்டும் பா.ஜ.க.வை ஆள அனுமதிப்பது தமிழுக்கும், தமிழனத்துக்கும், தமிழ்நாட்டுக்கும், இந்திய நாட்டுக்கும், நாட்டின் எதிர்காலத்துக்கும் அது கேடாக போய் முடியும். மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் தமிழ்நாட்டில் எப்படி ஒற்றுமையாக இருந்து செயல்பட்டு வெற்றியை பெறுகிறமோ, அத்தகைய செயல்பாடும், ஒருங்கிணைப்பும் அகில இந்திய அளவில் ஏற்பட்டாக வேண்டும். வெற்றி வேண்டும். வெற்றிக்கு முன்னால் ஒற்றுமை வேண்டும்.

இதனுடைய முன்னோட்டமாக தான் பீகார் மாநிலத்தில் இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது. நாம் ஒரு தாய் மக்கள். அந்த உணர்வோடு பணியாற்றி கருணாநிதியின் கனவுகளை நிறைவேற்றுவோம். கருணாநிதிக்கு நான் மட்டும் மகன் அல்ல, நீங்கள் அனைவரும் அவருடைய பிள்ளைகள் தான். கொள்கைவாதிகள் தான்.

நாற்பதும் நமதே

கொள்கை வாரிசுகள் தான். அடக்குமுறை ஆதிக்கங்களுக்கு எதிரான திராவிடத்தின் வாரிசுகளான நாம் இந்தியா முழுவதும் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவோம். நாற்பதும் நமதே, நாடும் நமதே.

இவ்வாறு அவர் பேசினார்.

நிறைவாக, தயாளு அம்மாள் அறக்கட்டளையின் அறங்காவலர் சம்பத்குமார் நன்றி கூறினார்.

இந்த விழாவில் சபாநாயகர் மு.அப்பாவு, நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு, துரைமுருகன், ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, க.பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், ராஜகண்ணப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட அமைச்சர்கள், முதல்-அமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின், சகோதரர் மு.க.தமிழரசு, சகோதரிகள் செல்வி, கவிஞர் கனிமொழி எம்.பி. மற்றும் எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பனை வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன், தொழில் அதிபர் நல்லி குப்புசாமி உள்பட தி.மு.க. எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

கவியரங்கம்

முன்னதாக, காலை 10 மணிக்கு திருவாரூர் சகோதரிகளின் மங்கள இசையுடன் விழா தொடங்கியது. அதன் பின்னர் கவிஞர் வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடந்தது.

தொடர்ந்து, பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில், "மக்கள் மனதைப் பெரிதும் கவர்ந்தது தலைவர் கருணாநிதியின் பேச்சே, எழுத்தே" என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. பின்னர், மாலதி லஷ்மன் குழுவினரின் பாட்டரங்கம் நடந்தது.


Next Story