பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கை


பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 29 July 2023 1:30 AM IST (Updated: 29 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் யாராக இருந்தாலும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் எனவும், என்.எல்.சி.க்கு நிலம் அளித்த உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது எனவும் மதுரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

மதுரை

மதுரை

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் யாராக இருந்தாலும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் எனவும், என்.எல்.சி.க்கு நிலம் அளித்த உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது எனவும் மதுரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

என்.எல்.சி. விவகாரம்

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடலூர் மாவட்டம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சார்பில் பரவனாறு பகுதியில் மாற்றுப்பாதை அமைக்கக்கூடிய பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக என்.எல்.சி. நிறுவனம் அந்த பகுதியில் இருக்கக்கூடிய 6 கிராமங்களில் நில எடுப்பு பணிகளை செய்து வருகிறது. இந்த பணிகளுக்கு ஏற்கனவே 304 எக்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் 273 எக்டர் நிலங்கள் என்.எல்.சி. நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. இதில் 30 எக்டர் மட்டும்தான் நில உரிமையாளர்கள் இன்னும் என்.எல்.சி. நிறுவனத்திற்கு ஒப்படைக்கவில்லை.

என்.எல்.சி.யின், சுரங்க விரிவாக்க பணிகளுக்கு இந்த பரவனாறு மாற்று பாதை மூலமாக கொண்டு செல்ல வேண்டி இருக்கிறது. இதை செய்தால் தான் சுரங்கத்திற்கு மற்ற பணிகள் செய்ய முடியும். சுரங்கத்திற்கு மற்ற பணிகள் நடைபெற்றால் தான் மின்சார உற்பத்தி பாதிக்காமல் இருக்கும். மின்சார உற்பத்தி பாதிக்காமல் இருந்தால் தான் உரிய மின்சாரம் நமக்கு வழங்கும் சூழல் உருவாகும். இதுகுறித்து கடலூர் மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு முறையில் பேசி உள்ளார்கள். இது தொடர்பாக அரசியல் கட்சிகள் விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் ஏற்கனவே பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

கருணை தொகை

2006 முதல் 2013 வரை கையகப்படுத்தக்கூடிய 104 எக்டர் பரப்பளவிற்கு வரை உள்ள 382 நில உரிமையாளர்களுக்கு ஏற்கனவே ஒரு ஏக்கருக்கு ரூ.6 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இது நீங்கலாக ரூ.10 லட்சம் கூடுதலாக கருணைத்தொகை வழங்கப்பட இருக்கிறது. அதே காலகட்டத்தில் 2006 - 2013 வரை கையகப்படுத்தப்பட்ட 83 எக்டர் பரப்பளவில் உள்ள 405 நில உரிமையாளர்களுக்கு ஏக்கருக்கு ரூ.2.6 லட்சம் இழப்பீட்டுத் தொகை நீங்கலாக, மேலும் ரூ.14 லட்சம் கருணைத்தொகையாக வழங்கப்படவுள்ளது.

2000- 2005-ம் ஆண்டு வரை கையகப்படுத்தப்பட்ட 77 எக்டர் பரப்பளவில் உள்ள 301 நில உரிமையாளர்களுக்கு ரூ.2.4 லட்சம் வழங்கப்பட்டது. அதுபோக ரூ.6 லட்சம் கருணைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மொத்தமாக 1088 நில உரிமையாளர்களுக்கு ரூ.75 கோடி மதிப்பிலான இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 16-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நில உரிமையாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகை பெறுவது தொடர்பாக 10 நாட்கள் சிறப்பு முகாம் நடக்கிறது.

பரவனாறு மாற்று பாதை பகுதிகளில் பயிர் செய்யக்கூடிய விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் அளவிற்கு என்.எல்.சி. நிறுவனத்தின் மூலம் இழப்பீடு தொகை பெறுவதற்கான உறுதி அளித்துள்ளோம். ஏற்கனவே ஒரு ஏக்கருக்கு ரூ.23 லட்சம் வழங்கிய நிலையில் தற்போது ரூ.25 லட்சமாக கூட உயர்த்தி வழங்கி நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே தொடர்ச்சியாக பல்வேறு கால கட்டங்களில் என்.எல்.சி.க்கான நில எடுப்பு பணிகள் குறித்து உள்ளூரில் உள்ள உள்ள விவசாயிகளுக்கு என்.எல்.சி. நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் பேசி வருகின்றனர்.

போராட்டம்

இந்தநிலையில் என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தை சில அரசியல் கட்சி நடத்திய போது அறவழி போராட்டத்தை மாற்றி வன்முறைக்களமாக வெடித்திருப்பது கண்டனத்திற்குரியது. விவசாயிகள் அங்கு உள்ள நில உரிமையாளர்கள் இந்த விவகாரத்தை அமைதியாக கையாண்டாலும், சிலர் தூண்டுதலில் இந்த வன்முறை அரங்கேறி உள்ளது. இந்த வன்முறையின் காரணமாக 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ஒரு பிரச்சினையை பேசி தீர்வு காண முடியும். விவசாயிகளை கேடயமாக வைத்து இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

வன்முறையை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.

கடந்த டிசம்பர் மாதமே அவர்களுக்கு பயிரிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. திடீரென நில எடுப்பு பணிகள் அங்கு நடக்கவில்லை. பயிர் இருப்பதால், அவர்களுக்கு அதற்கான இழப்பீட்டு தொகையும் வழங்கப்பட இருக்கிறது. சுரங்கப்பாதை பணிகள் பாதிக்கப்பட்டு மின்சாரம் வினியோகம் தடையாகும் என்பதால் அந்தப் பகுதியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு ஆஸ்பத்திரியில் ஆறுதல்

முன்னதாக அமைச்சர் தங்கம் தென்னரசு, மின்கம்பம் நழுவி விழுந்து படுகாயம் அடைந்த பரிதி விக்னேசுவரனை, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து டீன் ரத்தினவேலுவிடம் கேட்டறிந்தார். மேலும் இழப்பீட்டு தொகையாக ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது. அப்போது, அப்போது, கோ.தளபதி எம்.எல்.ஏ., பகுதி செயலாளர் சுதன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Next Story