சேலத்தில் கனமழை பெய்தால் வெள்ளக்காடாக மாறும் குடியிருப்புகள் ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை


சேலத்தில் கனமழை பெய்தால்  வெள்ளக்காடாக மாறும் குடியிருப்புகள்  ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
x

சேலத்தில் கனமழை பெய்தால் 4 ரோடு அருகே உள்ள கோவிந்த கவுண்டர் தோட்டத்தில் குடியிருப்புகள் வெள்ளக்காடாகி விடுகிறது. இதனால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து மக்கள் இன்னலுக்கு உள்ளாகும் நிலை மழைக்காலத்தில் தொடர்கதை ஆகி விடுகிறது. இதற்கு தீர்வாக ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம்

சேலம்,

வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது

சேலம் கோவிந்தகவுண்டர் தோட்டம் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக 2 நாட்கள் இந்த பகுதியில் உள்ள 400-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து நின்றது..

இதனால் இரவு முழுவதும் அந்த பகுதி மக்கள் உறங்க இடமின்றி வீட்டின் மொட்டை மாடியில் தங்கியிருந்தனர். வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மழைநீரில் மூழ்கின. இதுதவிர அந்த பகுதியை சேர்ந்த ருக்குமணி என்ற 70 வயதுடைய மூதாட்டி ஒருவர் மழைநீரில் சிக்கி இறந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

கோவிந்தகவுண்டர் தோட்டம் பகுதியையொட்டி டி.வி.எஸ். ஓடை செல்கிறது. இந்த ஓடையை மார்க்கபந்து ஓடை, சுடுகாடு ஓடை என பல பெயர்களில் மக்கள் கூறி வருகின்றனர். இந்த ஓடை ஏற்காடு அடிவாரம் பகுதியில் இருந்து தொடங்கி குரும்பப்பட்டி, ஏ.டி.சி. நகர், பெரியபுதூர், சின்னபுதூர், தோப்புக்காடு, கோவிந்தகவுண்டர் தோட்டம், அங்கம்மாள் காலனி, சின்னேரி வயக்காடு, சினிமா நகர் வழியாக பள்ளப்பட்டி ஏரி வரை சென்றடைகிறது.

ஆக்கிரமிப்பு

ஏற்காட்டில் அதிகளவு மழை பெய்யும் போது அங்கிருந்து வரும் தண்ணீர் இந்த ஓடை வழியாக பள்ளப்பட்டி ஏரிக்கு சென்றது. ஆனால் தற்போது இந்த ஓடை ஆக்கிரப்பு காரணத்தினாலும், தூர்வார்ப்படாத காரணத்தினாலும் சரியாக தண்ணீர் செல்ல வழியில்லாமல் மழையின் போது ஊருக்குள் வெள்ளம் புகுந்ததாக கோவிந்தகவுண்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

பொதுவாக சுடுகாட்டு வைராக்கியம் என்று மக்களிடம் சொல்வழக்கு உள்ளது. அதாவது 'எப்படி இருந்தவன், இப்படி தண்ணீர் அடித்து செத்து போய் விட்டான்' என்று சுடுகாட்டில் வைத்து பேசும் மக்களில் பலர் ஊருக்குள் வந்ததும் மதுபான கடைகளுக்கு சென்று விடுவார்கள். அந்தளவில் தான் மக்களின் சுடுகாட்டு வைராக்கியம் இருக்கும்.

தொடர் கவனம் அவசியம்

அதே போன்று குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்து வெள்ளக்காடாக மாறும் போது மட்டும் ஓடைகளை தூர்வாரி விட்டு, அதன்பிறகு ஓடைகளின் நிலை என்ன என்று அதிகாரிகளும், பொதுமக்களும் கண்டும், காணாமல் இருந்து விடுகிறார்கள். இந்த மனநிலை மாறுவதுடன், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு மற்றும் அடைப்புகள் ஏற்படாதவாறு ஆண்டு முழுவதும் அதிகாரிகள் தொடர்கண்காணிப்பில் இருந்தால் இதுபோன்று குடியிருப்புகள் வெள்ளக்காடாக மாறாது. இந்த விஷயத்தில் அதிகாரிகள் தொடர் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

-------------------

ஓடையின் இருபுறங்களிலும் தடுப்புச்சுவர் வேண்டும்

மழைக்காலத்தில் வெள்ளக்காடாக மாறும் குடியிருப்புகள் குறித்து மளிகை கடை நடத்தி வரும் வின்சென்ட் கூறும் போது, 'டி.வி.எஸ். ஓடை எந்த ஒரு ஆக்கிரமிப்பின்றி அதிக பரப்பளவில் காணப்பட்டது. தற்போது ஓடை இருப்பதே தெரியாத அளவுக்கு காணப்படுகிறது. ஆக்கிரமிப்பாலும், குப்பை கழிவுகள் கொட்டப்பட்டதாலும் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேற வழியின்றி ஊருக்குள் மழைநீர் புகுந்து வருகிறது. குறிப்பாக டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள பாலத்தின் அடிப்பகுதியில் தண்ணீர் செல்ல போதிய வசதி இல்லாமல் குறுகலாக உள்ளது. எனவே இந்த பாலத்தை அகலப்படுத்தி அதிகளவு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

இந்த பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் கூறும் போது, 'கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஏற்காட்டில் இருந்து வரும் தண்ணீர் இந்த ஓடை வழியாக பள்ளப்பட்டி ஏரிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது இந்த ஓடையில் சலவை தொழிலாளர்கள் துணிகளை துவைத்துடன் பொதுமக்களும் குளித்து வந்துள்ளனர். ஆனால் தற்போது இந்த ஓடையில் கோவிந்தகவுண்டர் தோட்டம் உள்பட சில இடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தான் சென்று வருகிறது. இந்த ஓடையை தூர்வாருவதுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் தான் ஊருக்குள் மழைநீர் புகுவதை தடுக்க முடியும்' என்றார்.

சரவணன் என்பவர் கூறும் போது, 'டி.வி.எஸ். ஓடையின் பல இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள், கோழி இறைச்சிகள் உள்ளிட்ட கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை தடுப்பதுடன் இந்த ஓடையின் இருபுறங்களிலும் தடுப்பு சுவர்கள் கட்டினால் ஊருக்குள் தண்ணீர் புகுவதை தடுக்க முடியும்' என்றார்.

சேலம் மாநகரில் மழைக்காலத்தில் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளநீர் புகுந்து விடுவதை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

கோவிந்தகவுண்டர் தோட்டம் பகுதிக்குள் மழைநீர் புகுந்ததையொட்டி டி.வி.எஸ். ஓடை தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஓடை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் தண்ணீர் வெளியேற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இனிவரும் காலங்களில் ஊருக்குள் தண்ணீர் புகாதபடி அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story