பெண்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தேசிய மகளிர் ஆணையம் உடன் நிற்கும் - குஷ்பு பேட்டி
பெண்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தேசிய மகளிர் ஆணையம் உடன் நிற்கும் என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கூறினார்.
சென்னை,
திருவண்ணாமலையில், ராணுவ வீரரின் மனைவி அவமானப்படுத்தப்பட்டதாக சென்னை, டிஜிபி அலுவலகத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு மனு அளித்துள்ளார்.
அதன்பின்னர் குஷ்பு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:-
திருவண்ணாமலை ராணுவ வீரரின் மனைவி அவமரியாதை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தோம். அதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக டிஜிபி உறுதி அளித்துள்ளார். மகளிருக்கு பிரச்சினை என்றால் தேசிய மகளிர் ஆணையம் உடன் நிற்கும்.
மல்யுத்த வீராங்கனைகள் விவகாரத்தில் ஆணையம் நேரடியாக தலையிட முடியாது. மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தினைப் பொறுத்தவரையில், நாங்கள் அவர்கள் பக்கம் தான் இருக்கிறோம். முதலில் வீராங்கனைகள் போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர். எனவே அந்த விஷயம் நீதிமன்றம் மூலம் தான் தீர்க்கப்படும்.
ஜெயலலிதா ஊழல்வாதி என்ற அண்ணாமலையின் பேச்சு குறித்த கேள்விக்கு குஷ்பு கூறுகையில், அண்ணாமலை என்றும் உண்மையைதான் பேசுவார். எந்த நேரத்தில் எப்படி பேச வேண்டுமென அவருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஈ.பி.எஸ் உடனான நட்பு அப்படியே உள்ளது. கூட்டணி இருந்தாலும், இங்கும் அங்கும் சில வார்த்தைகள் வரத் தான் செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.