பில்லாளி-மத்தளங்குடி சாலையை சீரமைக்காவிட்டால் முற்றுகை போராட்டம்


பில்லாளி-மத்தளங்குடி சாலையை சீரமைக்காவிட்டால் முற்றுகை போராட்டம்
x

பில்லாளி-மத்தளங்குடி சாலையை சீரமைக்காவிட்டால் முற்றுகை போராட்டம்

நாகப்பட்டினம்

திட்டச்சேரி

குண்டும், குழியுமான பில்லாளி-மத்தளங்குடிசாலையை சீரமைக்காவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

பில்லாளி ஊராட்சி

திருமருகல் ஒன்றியம் பில்லாளி ஊராட்சி மத்தளங்குடி, அனவாசநல்லூர், பில்லாளி ஆகிய கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேற்கண்ட கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலை உள்ளது.

இந்த சாலையை அப்பகுதி மக்கள் திருவாரூர், நாகப்பட்டினம், திருப்பயத்தாங்குடி, திருமருகல், திருக்கண்ண புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர பயன்படுத்தி வந்தனர். விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு எடுத்து செல்வதற்கும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் இந்த சாலை வழியாக திருக்கண்ணபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

குண்டும், குழியுமான சாலை

பில்லாளி செல்லும் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் ஜல்லிகற்களில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.

முற்றுகை போராட்டம்

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ள பில்லாளி-மத்தளங்குடி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.


Next Story