கோரிக்கைகள் மறுக்கப்பட்டால் ஆசிரியர்களை திரட்டி பா.ஜ.க. போராட்டம் -அண்ணாமலை அறிவிப்பு
ஆசிரியர்கள் கோரிக்கை மறுக்கப்பட்டால், ஆசிரியர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை பா.ஜ.க. முன்னெடுக்க தயாராக இருப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
போற்றப்பட வேண்டிய ஆசிரியர்கள் எல்லாம் தமிழக அரசிடம், தங்கள் வாழ்க்கைக்காக, கையேந்திப் போராடும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
கடந்த பத்து நாட்களுக்கும், மேலாக கல்வித்துறை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும், ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிவோடு கேட்டு ஆவன செய்ய மனம் இல்லாத தி.மு.க. அரசு, போராடும் ஆசிரியர்களில், பெண்கள் நூற்றுக்கணக்கான பேர் இருக்கும் இடத்திலே, கழிப்பிட வசதியையும், குடிநீரையும் தடுப்பது அருவருக்கத்தக்க அராஜக செயலாகும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தி.மு.க. தேர்தல் அறிக்கை 181-ல் குறிப்பிட்டுள்ளபடி சிறப்பு ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியையும், தேர்தல் அறிக்கை எண் 177--ல் குறிப்பிட்டது போல தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் பணி வழங்கப்படும் என்ற வாக்குறுதியையும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்ற தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண் 311-ல் கூறிய வாக்குறுதியையும், நிறைவேற்ற வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்துகிறது.
போராட்டம்
தி.மு.க. தங்கள் நிலைப்பாட்டை மாற்றாது, 'டெட்' தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கி, சிறப்பு ஆசிரியர்களின் ஊதிய வேறுபாட்டை களைந்து, ஆசிரியர்களின் மனக்குறைகளை நீக்கி, அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
ஆசிரியர்கள் கோரிக்கை மறுக்கப்பட்டால்., ஆசிரியர்களை எல்லாம் ஒன்று திரட்டி வெகுவிரைவில் மிகப்பெரிய போராட்டத்தை பா.ஜ.க. முன்னெடுக்க தயாராக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வேடிக்கை பார்க்கும் அரசு
அண்ணாமலை வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், 'காவிரி மேலாண்மை வாரியம், தமிழகத்துக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடக்கூறியும், கர்நாடக மாநில அரசு மறுத்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால், காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயம் நிச்சயம் பாதிக்கப்படும் என்ற நிலை நிலவுகிறது.
ஆனால், தி.மு.க. அரசோ, இதுகுறித்து எந்த கவலையும் இல்லாமல், தங்கள் கட்டணிக் கட்சியான கர்நாடக காங்கிரஸ் அரசை வலியுறுத்தவோ, கண்டனம் தெரிவிக்கவோ தைரியமின்றி வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறது' என்று கூறியுள்ளார்.