ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம்


ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
x

குடியாத்தத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பா.ம.க.வினர் மனு அளித்தனர்.

வேலூர்

குடியாத்தத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பா.ம.க.வினர் மனு அளித்தனர்.

மக்கள் குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உத்தரவிட்டார்.

ஆர்ப்பாட்டம்

கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி குடியாத்தம் நகர செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

குடியாத்தம் புதுப்பேட்டையில் உள்ள சாலையில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த சாலை ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் பொதுமக்கள் நடமாட முடியாத நிலை உள்ளது. ஆம்புலன்ஸ்கள் செல்வதற்கு கூட சரியான வழி இல்லை. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பலமுறை மனு அளித்துள்ளோம். ஆனால் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காட்பாடியை அடுத்த தொண்டான்துளசி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் தொண்டான் துளசி இருளர் காலனியில் 35-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அதேபோன்று குடியாத்தம் குமரன் நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று மனு அளித்தனர்.

உயர்மட்ட மேம்பாலம்

குடியாத்தம் தாலுகா வெங்கடாபுரம், பாக்கம் கிராமம் எம்.ஜி.ஆர். நகர், லட்சுமிநகரில் வசித்து வரும் நரிக்குறவர் இனமக்கள் அளித்துள்ள மனுவில் நாங்கள் சுமார் 80 குடும்பங்களாக வசித்து வருகிறோம். எங்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பலர் விண்ணப்பித்துள்ளோம். மேலும் அரசு சார்பில் இலவசமாக வீடு கட்டித்தருவதாக தெரிவித்தனர். பின்னர் அதற்கான ஆணை ரத்து செய்யப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். எங்களுக்கு இலவச வீடு கட்டித்தர வேண்டும். மேலும் சுடுகாடு வசதிஇல்லாமல் அவதிப்பட்டு வருவதால் சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்கித்தர வேண்டும் என்று கூறி உள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜி.லதா மற்றும் நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் குடியாத்தம் நகரில் புறவழிச்சாலை இல்லாததால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வாக கெங்கையம்மன் கோவில் வழியாக கவுண்டன்ய ஆற்றின் குறுக்கே தரைபாலம் அமைக்கப்பட்டது. மழையின் காரணமாக இந்தபாலம் சேதமடைந்துள்ளது. எனவே அங்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும். சந்தப்பேட்டை, பீரான்நகர், மொய்தீன்பேட்டை, கூடநகரம் ரோடு, பெரியார்நகர், காமாட்சிஅம்மன்பேட்டை, போஸ்ப்பேட்டை, தங்கம்நகர் வழியாக கழிவுநீர் கால்வாய் அமைத்திட வேண்டும். கவுண்டன்ய ஆற்றின் ஓரம், ஏரி கசம் சாலை ஓரம் வசித்துவந்த பொதுமக்களின் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டன. அவர்களுக்கு உடனடியாக குடியாத்தம் பகுதியில் வீடுகள் கட்டித்தர வேண்டும். மோர்தானா அணைக்கட்டு பகுதியை சுற்றுலா தலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை குறிப்பிட்டிருந்தனர்.

கூட்டத்தில், 6 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி வழங்கினார். மாவட்ட உணவு வழங்கல் அலுவலர் சுமதி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story