வாகன நம்பர் பிளேட்டை பொதுமக்கள் வடிவமைக்காவிட்டால் வழக்குப்பதிவு


வாகன நம்பர் பிளேட்டை பொதுமக்கள் வடிவமைக்காவிட்டால் வழக்குப்பதிவு
x

வாகன நம்பர் பிளேட்டை பொதுமக்கள் வடிவமைக்காவிட்டால் வழக்குப்பதிவு

தஞ்சாவூர்

புதிய நம்பர் பிளேட் விதிமுறையின்படி வாகன நம்பர் பிளேட்டை பொதுமக்கள் வடிவமைக்காவிட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மோட்டார் வாகன விதிகள்

சமீபகாலமாக பெரும்பாலான வாகனகங்ளில் குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் மோட்டார் வாகன விதிகளுக்கு புறம்பாக உள்ளது. இந்த பிழையான நம்பர் பிளேட்டுகள் கொண்ட வாகனங்கள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் போதும், விபத்துக்கள் ஏற்படுத்தி விட்டு நிற்காமல் செல்லும் பொழுதும் அவற்றின் பதிவு எண்களை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பிழையான நம்பர் பிளேட்டுகளை கொண்டுள்ள வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், சாலையோரங்களில் அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதை கட்டுப்படுத்தவும் போக்குவரத்து போலீசார் அதிரடி வாகன சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

தீவிரம்

மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி அனைத்து தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளும் வெள்ளை கலரில் இருக்க வேண்டும். அவற்றில் உள்ள எழுத்துக்கள் கருப்பு கலரில் இருக்க வேண்டும். வர்த்தக வாகனங்களில் மஞ்சள் கலரில் நம்பர் பிளேட்டுகளும், அவற்றில் உள்ள எழுத்துக்கள் கருப்பு கலரிலும் இருக்க வேண்டும். ஆனால் பலரும் தங்களது நம்பர் பிளேட்டில் ஆன்மிகம், அரசியல், சினிமா போன்றவற்றை மையப்படுத்தி நம்பர் பிளேட்டுகளை அமைத்து வருகின்றனர்.

தற்போது தஞ்சை மாநகரில் போக்குவரத்து போலீசார் நம்பர் பிளேட் விவகாரத்தில் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளனர். நேற்று தஞ்சை அண்ணாசிலை முன்பு, ரகுமான்நகர், புதிய பஸ் நிலையம், ராஜராஜசோழன் சிலை பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பல பகுதிகளில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக எந்த வண்டியில் நம்பர் பிளேட் சரி இல்லாமல் வந்த வண்டிக்கு ரூ.500 அபராதம் விதித்தனர்.

மேலும் அருகில் உள்ள ஸ்டிக்கர் கடைக்கு சென்று நம்பர் பிளேட்டை அரசு நிர்ணயித்துள்ளபடி மாற்றி வடிவமைத்து மீண்டும் வாகனத்தை கொண்டு வந்து காண்பித்து அதை போக்குவரத்து போலீசார் புகைப்படம் எடுத்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகளும் எதற்கு பிரச்சினை என நம்பர் பிளேட்டை மாற்றி, அபராத தொகையை செலுத்திவிட்டு சென்றுவிடுகின்றனர்.

ஒத்துழைப்பு

இது குறித்து போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கூறும்போது, கடந்த 3 நாட்களாக போக்குவரத்து விதிகளை கடுமையாக அமல்படுத்த வாகன சோதனைகளை நடத்தி வருகிறோம். ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி நம்பர் பிளேட் இல்லாமல் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதுடன் புதிதாக நம்பர் பிளேட் மாற்றி வரும்படி அறிவுரை வழங்கி அனுப்பி வைக்கிறோம். மறுநாள் புதிய நம்பர் பிளேட் மாற்றிவிட்டு வந்து காண்பிக்க வேண்டும். இல்லையென்றால் மறுநாளும் அபராதம் விதித்து வருகிறோம். ஒவ்வொரு வாரமும் இதை படிப்படியாக சரி செய்து வாகன ஓட்டிகளிடம் நம்பர் பிளேட் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

அரசு நிர்ணயித்துள்ள புதிய நம்பர் பிளேட் விதிமுறையின்படி வாகன நம்பர் பிளேட்டை பொதுமக்கள் வடிவமைக்க வேண்டும். இல்லையென்றால் வாகனங்களை போக்குவரத்து போலீசார் மடக்கி வழக்குப்பதிவு செய்வார்கள். முன்புபோல் அபராதம் கட்டிவிட்டு சென்றுவிட முடியாது. கண்டிப்பாக சம்பவ இடத்திலேயே நம்பர் பிளேட்டை மாற்றி மீண்டும் கொண்டு வந்து காண்பிக்க வேண்டும். இதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.


Related Tags :
Next Story