கோவிலை முடக்கினால் தலித் இயக்கங்கள் ஒன்றிணைந்து அரசை முடக்குவோம் செகு தமிழரசன் பேட்டி
கோவிலை முடக்கினால் தலித் இயக்கங்கள் ஒன்றிணைந்து அரசை முடக்குவோம் என செகு தமிழரசன் கூறினார்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று இந்திய குடியரசு கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் இருவேல்பட்டு குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்லா வரவேற்றார். பொருளாளர் முருகன், செய்தி தொடர்பாளர் நாராயணன், இளைஞரணி அமைப்பாளர் ஜெயஸ்டாலின், தொண்டர் படை அமைப்பாளர் ராஜா, தொழிலாளரணி அமைப்பாளர் அழகிரி, தொழிற்சங்க அமைப்பாளர் மணிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன், மாநில நிர்வாகிகள் மங்காபிள்ளை, அன்புவேந்தன், கவுரிசங்கர், தன்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். தமிழகமெங்கும் இயங்கி வருகிற 1,135 ஆதிதிராவிட நலப்பள்ளிகளை ஒட்டுமொத்த பட்டியல் சமூக மக்களின் எதிர்ப்பையும் மீறி பொதுக்கல்வித்துறையோடு இணைப்பதை கைவிட வேண்டும், மேல்பாதி திரவுபதியம்மன் கோவில் விஷயத்தில் மத வழிபாட்டு உரிமை சட்டத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகமெங்கும் தொடரும் சாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் நிர்வாகிகள் ராஜேந்திரன், கணேசன், முனியப்பன், ராஜேஷ், கார்த்திக்பாலன் குருமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர தலைவர் சிலம்பரசன் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் செ.கு.தமிழரசன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், விழுப்புரம் அருகே மேல்பாதி கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்களை வழிபாடு செய்யவிடாமல் கோவிலை பூட்டி வைத்துள்ளனர். தமிழகத்தில் இதுபோன்ற பிரச்சினையால் 2 கோவில்கள் மூடப்பட்டுள்ளது. கோவிலை மூடுவது அவசியமற்றது. கோவில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் வழிபாட்டு உரிமையை பாதுகாப்பது அரசின் கடமையாகும். நீங்கள் கோவிலை முடக்கினால் தலித் இயக்கங்கள் ஒன்றிணைந்து இந்த அரசை முடக்குவோம். அதற்காக எங்கள் போராட்டத்தையும் வலுப்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.