சுங்கச்சாவடியை அகற்றாவிடில் தொடர் போராட்டம்
சுங்கச்சாவடியை அகற்றாவிடில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
சுங்கச்சாவடியை அகற்றாவிடில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
பேட்டி
திருவண்ணாமலையில் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
நாடு முழுவமும் தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டண வசூல் மையங்களை (சுங்கச் சாவடிகள்) உருவாக்கி சாதாரண மக்களிடம் பிரதமர் மோடி அரசாங்கம் பகல் கொள்ளை அடிக்கிறது. திருவண்ணாமலை-வேலூர் சாலையானது இருவழி சாலையாக உள்ளது. இருவழி சாலையில் வசூல் மையம் அமைக்கக்கூடாது. 4 வழி சாலையாக மாற்றாமல், இருவழி சாலையில் வசூல் மையங்களை அமைத்து உள்ளனா். திருவண்ணாமலையில் திருவிழா மற்றும் கிரிவலத்துக்கு வரக்கூடிய பக்தர்களிடம் கொள்ளை அடிப்பதற்காக வசூல் மையம் செயல்படுகிறது.
இந்தியா முழுவதும் வசூல் மையங்களை நடத்தி கொண்டும், இதற்காக ஒரு நிறுவனத்தை உருவாக்கியும் மத்திய நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்காரி செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் 32 இடங்களில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள வசூல் மையங்களை அகற்ற வேண்டும் என்று நிதின் கட்காரியிடம் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தி உள்ளார். ஆனால் இன்று வரை மத்திய அரசாங்கம் அகற்றவில்லை.
பணம் வசூலிக்கக்கூடாது
விழுப்புரம்-திருவண்ணாமலை-வேலூர் சாலையில் 60 கிலோ மீட்டர் இடைவெளியில் வசூல் மையம் அமைக்கப்பட வேண்டும். ஆனால் 57 கிலோ மீட்டர் தொலைவில் வசூல் மையத்தை அமைத்துள்ளனர். நகராட்சி பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் தான் வசூல் மையம் அமைக்க வேண்டும் என்ற வீதி மீறப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருகே இனாம்காரியந்தல் வசூல் மையத்தை அகற்ற வேண்டும் என பல கட்ட போராட்டம் நடத்தப்பட்டுள்ளன. மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என கலெக்டர் கூறுகிறார். அதேநேரத்தில் வசூல் செய்யும் பணி தொடர்கிறது. மத்திய அரசை காரணம் காட்ட வேண்டாம். நீங்கள் (தமிழக அரசு) தெரிவித்தும் அகற்றவில்லை என்ற நிலை இருக்கும்போது, வசூல் மையத்தை மூட சென்ற எங்களை அரசாங்கம் ஏன் தடுக்க வேண்டும். காவல்துறை ஏன் தடுக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாயை, மக்களிடம் இருந்து வசூல் மையம் கொள்ளை அடிக்கிறது. வசூல் மையத்தை உடனடியாக அகற்ற வேண்டும். அதுவரை, திருவண்ணாமலையை சுற்றி 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மக்களிடம் இருந்து பணம் வசூலிக்கக்கூடாது. இதற்காக பாஸ் வழங்க வேண்டும். நீர்நிலை புறம்போக்கு இடத்தில் குடிசை வீடு இருந்தால் இடிக்கப்படுகிறது. நீரோடையில் உள்ள வசூல் மைய அலுவலகத்தை ஏன்? அகற்றவில்லை. சுங்கச்சாவடியை அகற்றவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.