''ஆதீனங்களை தொந்தரவு செய்தால் நாங்கள் முன் வந்து நிற்போம்''-பொன்.மாணிக்கவேல் பேட்டி
‘‘ஆதீனங்களை தொந்தரவு செய்தால் நாங்கள் முன் வந்து நிற்போம்’’ என ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் கூறினார்.
சிவனடியார்கள் அமைப்பு
உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் அறக்கட்டளை சார்பில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டையில் நகரத்தார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தலைமை ஆலோசகரும், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியுமான பொன்.மாணிக்கவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிவனடியார்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பிரான்சில் நடராஜர் சிலையை ஏலம் விட இருந்ததை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தடுத்து நிறுத்தியது பாராட்டுக்குரியது. அந்த சிலையை தமிழகத்திற்கு மீட்டு கொண்டுவர வேண்டியது நமது கடமையாகும். அதனால் வழக்குப்பதிவு செய்து சிலையை மீட்டு கொண்டு வர வேண்டும். சிலைகள் தொடர்பான வழக்கில் உயர் அதிகாரிகள் தாங்களாகவே முன்வந்து புலன்விசாரணை செய்ய வேண்டும்.
தெய்வ சிலைகள்
ஆதீனங்களுக்கு தொந்தரவு வந்தால் நாங்கள் முன்நிற்போம். ஆன்மிகம் புனிதமானது. அரசியல் என்பது சாக்கடை. இந்த இரண்டையும் கலக்க முடியாது. ஆனால் நாங்கள் சாக்கடையில் தான் முறையிட வேண்டியது உள்ளது. எங்களுக்கு வேறு வழியில்லை. சிவனடியார்கள் அமைப்பின் நோக்கம் 3 லட்சத்து 50 ஆயிரம் தெய்வ சிலைகளை பதிவு செய்வது. தமிழகத்தில் சுமார் 26 ஆயிரம் கோவில்களில் 10 முதல் 20 ஆண்டுகளில் அர்ச்சகரே இல்லாத சூழல் உருவாகும். என்னுடைய அனுபவத்தின் அடிப்படையில் தான் இவர்களை ஒன்று சேர்க்கிறோம்.
கோவில் சேதம்
அறநிலையத்துறையினர் கோவில்களுக்கு உரிமையாளர்களாக மாறிவிட்டனர். அவர்கள் கூலிக்காரர்கள் தான். வீரசோழபுரத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோவில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனை திருப்பணிகள் மேற்கொள்ள அரசு நிதி ஒதுக்கவில்லை. ஆனால் அந்த கோவிலின் 35 ஏக்கர் நிலத்தை எடுக்கின்றனர். இது அதர்மம் இல்லையா?. 21 இடங்களில் சிலை பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் திருவாரூரில் ஒரு மையத்தில் தெய்வ சிலைகளில் 191 சிலைகள் போலியானவை என தெரியவந்தது. இது தொடர்பாக புகார் அளித்தும் அறநிலையத்துறை, தொல்லியல் துறையினர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கூட்டத்தில் அவர் பேசுகையில், ''ஆதீனங்கள் அரசியல்வாதிகளை தேடி போகக்கூடாது. அரசியல்வாதிகள் தான் ஆதீனங்களை தேடி வர வேண்டும். கோவில்களில் சிலைகள் காணாமல் போனது தொடர்பாக ஆதீனங்கள் யாரும் இதுவரை புகார் அளித்ததில்லை'' என்றார்.