விளைநிலங்களில் மண் அள்ளுவதை தடுக்காவிட்டால் போராட்டம்


விளைநிலங்களில் மண் அள்ளுவதை தடுக்காவிட்டால் போராட்டம்
x
தினத்தந்தி 1 Aug 2022 5:33 PM GMT (Updated: 1 Aug 2022 5:42 PM GMT)

பழனி அருகே விளைநிலங்களில் மண் அள்ளுவதை தடுக்காவிட்டால் போராட்டம் நடத்த போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

திண்டுக்கல்

பழனியை அடுத்த ஆயக்குடி பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பழனி ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் ஆர்.டி.ஓ. சிவக்குமாரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், ஆயக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கொய்யா சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் வரதமாநதி அணை நீர் மூலம் நெல் சாகுபடியும் நடக்கிறது.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக ஆயக்குடி மலையடிவாரத்தை ஒட்டியுள்ள விளைநிலங்களில் சிலர் அனுமதியின்றி மண் அள்ளி வருகின்றனர். அவ்வாறு மண் அள்ளிச்செல்ல பயன்படுத்தப்படும் லாரிகள் சட்டப்பாறை, வரதாப்பட்டினம் சாலையில் அதிகமாக செல்கிறது. இதில் மண் அள்ளி வரும் போது தூசு, புழுதி பறப்பதால் அந்த வழியாக தோட்டத்துக்கு செல்லும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எடுத்து வர கடும் சிரமம் அடைகின்றனர்.

விவசாய பயன்பாட்டுக்கு போடப்பட்ட இந்த சாலைகளில் மண் ஏற்றி வரும் லாரிகளால் விவசாயிகள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே மண் அள்ளுவதை தடுத்து விளைநிலங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் நிருபர்களிடம் விவசாயிகள் கூறுகையில், மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.


Next Story